அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு இணையான வல்லமை படைத்த இராணுவமாக இந்தியாவை மாற்றும் முயற்ச்சியில் இந்திய பாதுகாப்பு துறை இறங்கியுள்ளது. ஜப்பான்,தென் கொரியா, போன்ற நாடுகளின் பாதுகாப்புத்துறையை அறிந்துவர விரைகிறார் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இந்தியாவின் மீது போர் தொடுக்க தயங்க மாட்டோம் என பாகிஸ்தான் அதிரடிகாட்டிவரும் நிலையில், இராணுவத்தை பலப்படுத்தும் முயற்ச்சியில் இந்தியா இறங்கியுள்ளது. பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளிடமிருந்து அதிரடியாக புதிய ரக போர் விமானங்களை இந்தியா இறக்குமதி செய்துவருகிறது, எல்லையில் பாகிஸ்தானைபோலவே,   அடிக்கடி இந்தியாவிடம் வாலாட்டி வந்த சீனா தற்போது காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது, சில நேரங்களில் அமெரிக்காவும் காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைக்கிறது. இந்நாடுகளுக்கெல்லாம், நம் இராணுவத்தால் பதில் சொல்ல வேண்டிய சூழல் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ள வேண்டிய ஆற்றல் நமக்கு அவசியம் என்பதை உணர்ந்துள்ளது இந்தியா. 

எனவே இராணுவ கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தில்  செய்தித்தொடர்பாளர் பாரத் பூஷன் பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய ராணுவ கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.செப்டம்பர் மாதம் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை ஜப்பான்,  தென்கொரியா நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொள்ளகிறார் என தெரிவித்துள்ளார். 

இந்த சுற்றுப்பயணத்தின் போது இருநாட்டு  அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு மற்றும் இந்திய ராணுவத்தை வலுப்படுத்துவது தொடர்பாக ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.