கொரோனா வைரஸ் பாம்பு கறியிலிருந்து நோய் பரவியிருக்க வாய்ப்புள்ளதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளதையடுத்து மக்கள் ஊர்வன பறப்பன போன்றவற்றை விடுத்து காய்கறி மார்க்கெட்டுகளை நாடத் தொடங்கியுள்ளனர். 

சீனாவில் சமீபகாலமாக, கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு 41 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வூஹான் நகரில், இந்த வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், கடுமையான சளி, தொடர் இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் ஆகியவை நோயின் முதல் அறிகுறிகள் என கூறப்படுகிறது. தொடர்ந்து நுரையீரலை தாக்கும் வைரஸ் நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தி உயிரைக் குடிக்கிறது. இதனால், சீன மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

இந்நிலையில், படுவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க அந்நாட்டில் விரைவாக புதிய மருத்துவமனை ஒன்றை அமைக்க அந்நாட்டு அரசு தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறது. மேலும், புதிதாக அமைய உள்ள இந்த மருத்துவமனை 10 நாட்களுக்குள் 25,000 சதுர மீட்டரில் 1,000 படுக்கைகளுடன் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, 13 நகரங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் தொடர்பாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்த போது பாம்பு கறியிலிருந்து நோய் பரவியிருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, சீன மக்கள் ஊர்வன பறப்பன போன்றவற்றை விடுத்து காய்கறி மார்க்கெட்டுகளை நாடத் தொடங்கியுள்ளனர். எனினும், இதற்கான ஆய்வு முடிவுகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

இதையும் படிங்க;- கொரோனா வைரஸ் பீதி... 240 மணிநேரத்தில் உருவாகும் 1,000 படுக்கைகள் கொண்ட அதிநவீன புதிய மருத்துவமனை... வியப்பில் உலக நாடுகள்..!

இதனிடையே சீனாவின் ஷென்சென் நகரில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் இந்தியரான பிரீத்தி மகேஸ்வரிக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால் சிகிச்சைக்கு 1 கோடி ரூபாய் தேவைப்படுவதாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரக உதவியை அவரது சகோதாரர் நாடியுள்ளார். இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் கொரோனா தொற்றை பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுறது.