சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது. 1,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால், வைரஸ் வேகமாக பரவி வருவதால் அவற்றை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சீனாவில் சமீபகாலமாக, கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடுமையான சளி, தொடர் இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் ஆகியவை இந்த நோயின் முதல் அறிகுறிகள் என கூறப்படுகிறது. தொடர்ந்து நுரையீரலை தாக்கும் வைரஸ் நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தி உயிரைக் குடிக்கிறது. இந்த நோய் பாம்பு கறியிலிருந்து நோய் பரவியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். 

வூஹான் நகரில், இந்த வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இந்த நோய்க்கு 41 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த வைரஸ் பாதிப்புக்கு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 

இந்நிலையில், படுவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க அந்நாட்டில் விரைவாக புதிய மருத்துவமனை ஒன்றை அமைக்க அந்நாட்டு அரசு தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறது. மேலும், புதிதாக அமைய உள்ள இந்த மருத்துவமனை 10 நாட்களுக்குள் 25,000 சதுர மீட்டரில் 1,000 படுக்கைகளுடன் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கைகள் இல்லாத காரணத்தால் தற்போது இந்த புதிய மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது.