உலக பணக்கார நாடுகளின் பிடியில் கொரோனா தடுப்பூசி..!! ஏழை நாடுகள் புறக்கணிப்பு.. ஆய்வு முடிவில் அதிர்ச்சி.
மொத்தத்தில் 85% மக்களுக்கு இந்த தடுப்பூசிகள் கிடைத்தாலும், உலக மக்கள் தொகையில் கால் பகுதியினர் covid-19 தடுப்பூசி பெறாமல் போகலாம் என தெரிவித்துள்ளது.
உலக மக்கள் தொகையில் கால் பங்கு அளவிலான மக்களுக்கு வரும் 2022ஆம் ஆண்டின் கடைசி வரையில் கூட covid-19 கான தடுப்பூசி கிடைக்கப் பெறாமல் போகலாம் என தி பி.எம்.ஜே என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தடுப்பூசி உற்பத்தி எவ்வளவு சவாலானதோ அதைவிட சவாலானது அதை வினியோகிப்பது எனவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல் மற்றொரு பத்திரிக்கை வெளியிடப்பட்டுள்ள மற்றொரு ஆய்வில் உலக அளவில் 3.7 பில்லியன் முதியவர்கள் கொரோனா தடுப்பூசி போட ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை உலக அளவில் 74,481,987 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 52,314, 362 பேர் அத்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை உலகம் முழுவதும் இந்த வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16.54 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும்1,072,34 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கொரோனா வைரஸ் தொடர்பான புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்பை தடுக்க தடுப்பூசியின் அவசியம் அதிகரித்துள்ளது. அதற்கான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசி இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் உருவான ஸ்புட்னிக்-வி என்ற தடுப்பூசி ரஷ்ய நாட்டில் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. சீனா உருவாக்கி உள்ள தடுப்பூசி அந்நாட்டில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஆராய்ச்சியில் உள்ள கோவாக்சின் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்நிலையில் பி.எம்.ஜே என்ற நாளேடு உலக அளவில் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது உலக அளவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருந்தாலும் அவைகள் உலக மக்கள் தொகையில் வெரும் 13 சதவீதத்தைக் கொண்ட பணக்கார நாடுகளின் கைகளில் உள்ளது. தற்போது உற்பத்தியாகி இருக்கும் தடுப்பூசியின் 50 சதவீத அளவுக்கான தடுப்பூசி முன்கூட்டியே பணக்கார நாடுகளால் கொள்முதல் செய்யப்பட்டு விட்டது. இதுவரை 5 தடுப்பூசி மக்கள் பயன்படுத்த தயார் நிலையில் இருந்தாலும் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் மருந்தை வாங்கும் நாடுகள் முன்கூட்டியே ஒப்பந்தங்களை நிறைவு செய்துவிட்டன.
எனவே உலக அளவில் ஏழை,எளிய நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பது கேள்விக்குறியே எனவும், அடுத்த 2022ஆம் ஆண்டு வரையிலும்கூட உலக மக்கள் தொகையில் கால் பங்கு அளவிலான மக்களுக்கு இந்தத் தடுப்பூசிகள் கிடைக்காமலேயே போக வாய்ப்பிருக்கிறது எனவும் கூறியுள்ளது. ஒரு தடுப்பூசியை உற்பத்தி செய்வது எவ்வளவு சவாலாதோ அதே அளவிற்கு அதை சமமாக பகிர்ந்து அளிப்பதும் சவாலானது என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. உலக மக்கள் தொகையில் 14 சதவீதம் உள்ள உயர் வருமானம் கொண்ட நாடுகளுக்கு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் 51% தடுப்பூசிகள் கிடைக்கும் என்றும், மீதமுள்ள தடுப்பூசிகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு கிடைக்கும், மொத்தத்தில் 85% மக்களுக்கு இந்த தடுப்பூசிகள் கிடைத்தாலும், உலக மக்கள் தொகையில் கால் பகுதியினர் covid-19 தடுப்பூசி பெறாமல் போகலாம் என தெரிவித்துள்ளது.
அனைத்து தடுப்பூசி உற்பத்தியாளர்களும் அதிகபட்ச உற்பத்தித் திறனை எட்டினாலும் 2022ஆம் ஆண்டில் உலகில் ஐந்தில் ஒரு பகுதியையாவது பெறலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் தேவைக்கு ஏற்ப மருந்து விநியோகத்தை உறுதி செய்வதற்கு நியாயமான மற்றும் சமமான உத்திகளை உருவாக்குவது அவசியம் எனவும் அந்த ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.