அடுத்த மாதம் அமெரிக்காவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொரோனா தடுப்பூசி... மொத்தமாக அழித்தொழிக்க தீவிரம்..!!
மில்லியன் கணக்கான அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பிரச்சாரம் விரைவில் தொடங்கும் என்றும், அமெரிக்க பாதுகாப்பு துறையும், நோய்த்தொற்று கட்டுப்பாடு மற்றும் தடுப்பு துறையும் எஃப்.டி.எஸ்ஸிடமிருந்து ஒப்புதல் பெற்ற 24 மணி நேரத்திற்குள் தடுப்பூசி விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என அந்நாட்டில் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்கா தனது அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கான பிரச்சாரம் அடுத்த மாதத்திலிருந்து தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை உலக அளவில் 5.65 கொடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3. 93 கோடி பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் வைரசால் கடுமையாக பாதித்த நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை இந்நாடுகள் பிடித்துள்ளன.அதேபோல் இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் 1.18 கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.56 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.சுமார் 71 லட்சம் பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது. அமெரிக்காவில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு பொறுப் பேற்பதற்கு முன்பாகவே கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு சுகாதார துறை
டிசம்பர் மாத இறுதிக்குள் சுமார் 20 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கும் என்றும் ஏப்ரல் மாதத்திற்குள் சுமார் 70 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயாராக இருக்கும் என்றும், ஆகமொத்தத்தில் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதத்திற்குள் அமெரிக்காவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி கொடுக்கும் பணி நிறைவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஒரு நபர் மாடர்னா மற்றும் பைசர் நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுக்க வேண்டும் என்றும், அதில் கூறப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த நாட்டையும் நோய் தொற்றிலிருந்து தடுக்க அரசு ஆபரேஷன் வார்ப் ஸ்பீட் (ows)திட்டன் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில் சுகாதாரத்துறை, மனித வளம், பாதுகாப்பு துறை மற்றும் சில தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட கூட்டாட்சி அமைப்புகளின் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் இதன்கீழ் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளின் ஆராய்ச்சி, வளர்ச்சி, உற்பத்தி மற்றும் வெளியீடு உள்ளிட்டவைகள் குறித்து கண்காணித்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் கடைசி மாதத்தில் தடுப்பூசிகள் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் என்றும் வார்ப் தலைவர் டாக்டர் மொன்செப் ஸ்லோய் டைனிக் தெரிவித்துள்ளார். அதில் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பிரச்சாரம் விரைவில் தொடங்கும் என்றும், அமெரிக்க பாதுகாப்பு துறையும், நோய்த்தொற்று கட்டுப்பாடு மற்றும் தடுப்பு துறையும் எஃப்.டி.எஸ்ஸிடமிருந்து ஒப்புதல் பெற்ற 24 மணி நேரத்திற்குள் தடுப்பூசி விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.