பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு கொரோனா..!! பிரதமரும் பாதிப்பு.? எலிசி அரண்மனை அதிர்ச்சி தகவல்.
இந்நிலையில் அந்நாட்டில் அனைவருக்கும் பொதுவான சுகாதார விதிமுறைகளின்படி இம்மானுவேல் மக்ரோன் தன்னை 7 நாட்கள் தனிமைப் படுத்திக் கொள்வார் எனவும் ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது,.
பிரான்ஸ் நாட்டில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருந்து வரும் நிலையில் அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு சில நாட்களாக அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது என ஜனாதிபதி மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் வாட்டி வதைத்துவருகிறது. ஏழை, பணக்காரர் வேறுபாடின்றி அனைவரையும் ஈவுஇரக்கமின்றி தாக்கி வருகிறது. இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்- நடிகைகள், விளையாட்டு வீரர்கள். பிரபலங்கள், சர்வதேச நாடுகளின் தலைவர்கள் என பலரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட சர்வதேசத் தலைவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டுள்ளனர். அந்த வரிசையில் தற்போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அந்நாட்டில் அனைவருக்கும் பொதுவான சுகாதார விதிமுறைகளின்படி இம்மானுவேல் மக்ரோன் தன்னை ஏழு நாட்கள் தனிமைப் படுத்திக் கொள்வார் எனவும் ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அவர் தொடர்ந்து தனது அலவல் பணிகளை கவனித்து வருவதாகவும், சமூக இடைவெளியை அவர் கடைப்பிடித்து பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. அதேபோல் அவருடன் தொடர்பில் இருந்த பிரான்ஸ் பிரதமர் ஜூன் காஸ்டெக்ஸும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார். அவரும் சுயமாக தன்னை தனிமைப்படுத்திக் கொள்வார் என கூறப்பட்டுள்ளது. மக்ரோன் கொரோனா தொற்றுக்கு முன்னர் தொடர்ந்து அலுவல் பணிகளில் ஈடுபட்டுவந்தார் எனவும் கடந்த புதன்கிழமை அவர் போர்ச்சுக்கல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டாவுடன் மதிய உணவு விருந்தில் கலந்து கொண்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் பீட்டர் மவுரர் உட்பட பல்வேறு பிரதிநிதிகளை அவர் சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தொடங்கியதிலிருந்து இன்றுவரை அங்கு 2.4 மில்லியனுக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை அந்நாட்டில் 59,371 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் இரண்டாவது அலை தீவிரமாக இருந்து வரும் நிலையில் கடந்த புதன்கிழமை மட்டும் 17,615 பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அன்று ஒரு நாளில் மட்டும் 289 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் அவர் விரைவில் அதிலிருந்து மீண்டு வரவேண்டும் என அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.