ஆகஸ்டு மாதத்தில் வேகமெடுத்த கொரோனா, இதுவரை 100 மருத்துவர்கள் பலி..!! சுகாதாரத்துறை அதிரச்சி.
இந்த நெருக்கடியான நேரத்திலும் கூட மருத்துவமனைகள் முழுவீச்சில் இயங்குவதாகவும், கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் 2,858 புதிய வைரஸ் தொற்று பதிவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அந்நாட்டில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வந்த 100 மருத்துவர்கள் இதுவரை வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இது அந்நாட்டில் மட்டுமல்லாது, உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது, 200க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை உலக அளவில் 2.54 கோடி பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சுமார் 8.50 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மொத்தத்தில் 1.77 கோடி பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, பெரு உள்ளிட்ட நாடுகள் வைரஸ் தொற்றால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் இந்தோனேசியாவிலும் இந்த வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்த நாட்டில் 1.74 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7 ஆயிரத்து 417 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 74 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 959 பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். சுமார் 41 ஆயிரத்து 420 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக அளவில் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தோனேசியா 24 ஆவது இடத்தில் உள்ளது. அந்நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய சுமார் நூறு மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நெருக்கடியான நேரத்திலும் கூட மருத்துவமனைகள் முழுவீச்சில் இயங்குவதாகவும், கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் 2,858 புதிய வைரஸ் தொற்று பதிவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில், பார்கள் மற்றும் இரவு விடுதிகளை திறப்பதற்கு திட்டமிடப்பட்டு வந்த நிலையில், வைரஸ் தொற்று வேகம் அடைந்திருப்பதால், தற்போதுள்ள முடிவு கைவிடப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அந்நாட்டு மருத்துவர்கள் தன்னலம் பாராமல் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான மருத்துவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் இதுவரை 100 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். எப்போதும் இல்லாத அளவிற்கு ஆகஸ்ட் மாதத்தில் நோய்த் தொற்று அதிகரித்திருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.