Asianet News TamilAsianet News Tamil

இந்திய, அமெரிக்க எதிர்ப்பை மீறி இலங்கை வந்தடைந்தது சீன உளவுக் கப்பல் யுவான் வாங் 5

இந்திய, அமெரிக்க எதிர்ப்புகளை மீறி சீன உளவுக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது. ஆகஸ்ட் 11ஆம் தேதி இலங்கை வரவிருந்த சீன உளவுக் கப்பல் இந்தியாவின் எதிர்ப்பினால், இந்திய சுதந்திர தின நிறைவுக்குப் பின்னர் இன்று வந்தடைந்துள்ளது.

 Chinese spy ship Yuan wang 5 reached Sri Lanka's Hambantota port
Author
First Published Aug 16, 2022, 9:24 AM IST

சீனாவில் இருந்து செயகைக்கோள் வசதிகள் கொண்ட வேவு பார்க்கும் கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி வருவதாக கூறப்பட்டது. இதற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருந்தது. இலங்கை அரசையும் கண்டித்தது. இலங்கையும் கப்பல் பயணத்தை ஒத்தி வைக்குமாறு சீனாவுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தது. ஆனாலும், சீன கப்பல் பயணத்தை தொடர்ந்து இருந்தது. 

சீனாவின் யுவான் வாங் 5 என்ற உளவுக் கப்பல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்படும் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இது இலங்கை, இந்தியா இடையே பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கப்பல் செயற்கைக்கோள் மூலம் வேவு பார்க்கும் திறன் கொண்டது. இந்தியாவின் எதிர்ப்பையடுத்து, இந்தக் கப்பல் இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

சீனா-வுக்கு பதிலடி: இலங்கை கடற்படைக்கு டோர்னியர் கண்காணிப்பு விமானத்தை பரிசாக வழங்கியது இந்தியா

எதற்காக எதிர்ப்பு?

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து இந்தக் கப்பலால் 750 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இடங்களில் நடக்கும் செயல்பாடுகளை வேவு பார்க்க முடியும். தமிழ்நாட்டின் கல்பாக்கம், கூடங்குளம் மற்றும் இந்திய எல்லையில் இருக்கும் அணு ஆயுதக் கூடங்களை வேவு பார்க்க முடியும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கடற்கரைப் பகுதிகளை இந்தக் கப்பலால் நோட்டமிட முடியும். தகவல்களையும் இதனால் சேகரித்துக் கொள்ள முடியும். ஏறக்குறைய 2,000 மாலுமிகளைக் கொண்ட இந்த கப்பல் செயற்கைக்கோள்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கண்காணிக்கும் வசதிகளைக் கொண்டுள்ளது. இதுதான் இந்தியாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த துறைமுகத்தை கட்டமைப்பதற்கு இலங்கையிடம் இருந்து சீனா பெரிய அளவில் கடன் பெற்று இருந்தது. இறுதியில் கடனை அடைக்க முடியவில்லை. இதனால், இந்த துறைமுகத்தை குத்தகைக்கு சீனா எடுத்துக் கொண்டது. இதுவும் சீனாவின் கடன் சுமை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக இருந்தது.

ஆப்கானிஸ்தானில் கனமழையால் வெள்ளம்… குழந்தைகள், பெண்கள் உள்பட 31 பேர் பலி!! 

இந்தியாவின் தொடர் எதிர்ப்பை அடுத்து சமீபத்தில் விளக்க அளித்து இருந்த சீனா, ''ஏன் இலங்கை துறைமுகத்தில் எங்களது கப்பலை நிறுத்தக் கூடாது என்பதற்கான சரியான விளக்கம் இந்தியா தரப்பில் இல்லை. இந்தியப் பெருங்கடலில் இலங்கை முக்கிய போக்குவரத்து புள்ளியாக திகழ்கிறது. சீனா உள்பட பல்வேறு நாடுகளின் கப்பல்கள் இலங்கை துறைமுகத்திற்கு வந்து செல்கிறது. கடல் எல்லைப் பரப்பை எப்போதும் சீனா மதிக்கிறது.  

இலங்கை இறையாண்மை கொண்ட நாடு. இலங்கை, சீனாவின் ஒத்துழைப்பு என்பது இந்த இரண்டு நாடுகளும் தனிப்பட்ட முறையில் ஏற்படுத்திக் கொண்டது. ஆனால், இந்த ஒத்துழைப்பு என்பது மூன்றாம் தரப்பினரை குறிவைப்பதற்காக இல்லை. பாதுகாப்பு என்ற பெயரில் இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுப்பது விவேகமானதாக இருக்காது'' என்று தெரிவித்து இருந்தது.

தீவுகளில் சீன கப்பல் 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டிலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள இலங்கையின் மூன்று தீவுகளில் எரிசக்தி அமைப்புகளை நிறுவுவதற்காக ஒரு நிறுவனத்திற்கு சீனா அனுமதி அளித்து இருந்தது. இதை இந்தியா பகிரங்கமாக கண்டித்து இருந்தது. அப்போதும் இதேபோல், மூன்றாம் நபர் தலையீட்டை விரும்பவில்லை என்று சீனா அறிவித்தது. 

சீனாவிடம் ஏற்கனவே பெரிய கடன் பெற்று இருக்கும் இலங்கை தற்போது 4 பில்லியன் டாலர் அளவிற்கு கடன் கேட்டுள்ளது. ஆனால், கடன் கொடுப்பது குறித்து இதுவரைக்கும் சீனா வாய் திறக்கவில்லை. இந்த நிலையில்தான் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வேவு கப்பலை நிறுத்தியுள்ளது. 

இந்தியா எந்த பலனையும் எதிர்பார்க்காமல், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 3.5 பில்லியன் டாலர் அளவிற்கு உதவி செய்துள்ளது. ஆனால், இதே கால கட்டத்தில் சீனா வெறும் 74 மில்லியன் டாலர் உதவி மட்டுமே வழங்கியுள்ளது. சீனாவின் கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வரலாம் என்ற அனுமதியை சீனாவுக்கு கடந்த ஜூலை 12ஆம் தேதி இலங்கை அரசு வழங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios