எவ்வளவு புத்தி சொல்லியும் அடங்காத சீனாக்காரன்..!! தென் சீனக்கடலில் மீண்டும் போர் பயிற்சி..!!
மேலும் சீனா தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளாவிட்டால் தக்க பாடம் புகட்டப்படும் எனவும் அமெரிக்கா எச்சரித்தது.
தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எச்சரிக்கும் வகையில் சமீபத்தில் அமெரிக்கா போர் பயிற்சி மேற்கொண்ட நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது சீனாவும் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் செய்தியாளர்களை சந்தித்த சீனப் பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரென் குய்கியாங் இந்த தகவலை கூறியுள்ளார். தென்சீனக் கடலில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்த போர் ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இந்திய-சீன எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. ஜூன் 15ஆம் தேதி இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் இரு நாட்டுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இது தவிர தென் சீன கடல் எல்லையில், மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான், வியட்நாம், புருனே ஆகிய நாடுகளுடன் கடல் பகுதியை பகிர்ந்துகொள்வதில் சீனாவுக்கு மோதல் இருந்து வருகிறது. அதாவது கடல் பிராந்தியத்தில் 90% தனக்கே சொந்தம் என கூறி தென் சீனக் கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா முயற்சித்து வருகிறது. அங்கு சில செயற்கை தீவுகளை உருவாக்கி, அதில் சீனா ராணுவ கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. தென்சீன பிராந்தியத்தில் உள்ள சிறிய நாடுகளை மிரட்டும் வகையில் சீனா சமீபத்தில் போர் பயிற்சி மேற்கொண்டது, இந்நிலையில் சீனாவின் ஆதிக்கத்தை எச்சரிக்கும் வகையில் தென்சீனக் கடல் பகுதிக்கு யுஎஸ்எஸ் நிமிட்ஸ், பியுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன் என்ற 2 விமானம் தாங்கி போர்க் கப்பல்களை அமெரிக்கா அனுப்பி வைத்தது. அதைத்தொடர்ந்து தென்சீனக் கடலையொட்டி நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள், ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதுடன், தென்சீனக் கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் இனி எடுபடாது எனவும், சீனாவின் அத்துமீறலை சர்வதேச சமூகம் இனி வேடிக்கை பார்க்காது எனவும் எச்சரித்தது.
மேலும் சீனா தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளாவிட்டால் தக்க பாடம் புகட்டப்படும் எனவும் அமெரிக்கா எச்சரித்தது. இந்நிலையில் அமெரிக்காவை பதிலுக்கு எச்சரித்த சீனா, அமெரிக்கா வேண்டுமென்றே தென் சீன கடல் பிராந்தியத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில், தங்களது நாட்டு போர் கப்பல்களை அனுப்பி ராணுவப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது என்றும், தென் சீன விவகாரத்தில் தலையிடும் வேலையை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்தது. இந்நிலையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையுடன் இணைந்து, கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள இந்தியப்பெருங்கடல் வந்துள்ளன. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ள சீனா, தென்சீனக் கடல் பிராந்தியத்தில் மீண்டும் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரென் குய்கியாங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சீனாவின் எச் -6 ஜி மற்றும் எச் -6 ஜே ஜெட் குண்டுவீச்சு விமானங்கள் "அதி தீவிரத்துடன் பயிற்சியை மேற்கொண்டுள்ளன, மேலும் பகல் மற்றும் இரவு பயிற்சிகளிலும் ஈடுபட்டதாகவும், அணு ஆயுதங்களை எடுத்துச் செல்வது மற்றும் தரையிறக்குவது போன்ற பயிற்சிகளிலும் விமானங்கள் ஈடுபட்டுள்ளன. நீண்ட தூர தாக்குதல் மற்றும் கடல் இலக்குகள் மீதான தாக்குதல்கள்" என்று அந்த பயிற்ச்சி நடைபெற்றதாக பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரென் குய்கியாங் தெரிவித்தார். சீனாவின் இந்த பயிற்சிகள் வழக்கமான பயிற்சிகளில் ஒரு பகுதி எனவும் ரென் கூறினார்.