சீனாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான கிரேட்வால் மோட்டார்ஸ் இந்தியாவில் கால் பதிக்க திட்டமிட்டு இருக்கிறது. இந்திய ஆட்டோ மொபைல்துறையில் மிகப்பெரிய மந்தநிலை ஏற்பட்டிருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் இந்த நிறுவனம் சுமார் 7,000 கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்ய இருக்கிறது. 

இது தொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசுவதற்காக கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சேர்மன் வீ ஜியாங்ஜூன், பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி அனுமதி கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.  இந்த சந்திப்பு அடுத்த மாதத்தொடக்கத்தில் இருக்கலாம். இந்த சந்திப்புக்கு பிறகு அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படலாம் எனக் கூறப்படுகிறது.

 

இதற்கிடையில் தங்களது உற்பத்தி தொழிற்சாலையை நிருவுவதற்கான உகந்த சூழல் உள்ள இடத்தை கண்டறியும் முயற்சியிலும் கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் ஈடுபட தொடங்கியிருக்கிறது.  இதற்காக மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் இடம் பார்த்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுது. கடந்த வாரத்தில் மகாராஷ்டிர தொழில்துறையை சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று சீனா சென்று கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு தங்கள் மாநிலத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்திருக்கின்றனர். 

2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய தொழிற்சாலைய செயல்பாட்டுக்கு கொண்டுவரும் விதமாக கிரேட் வால் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் முதல் முறையாக தமிழகம் வந்திருந்த சீன அதிபர் ஜின் பிங்கிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி, சீனாவுடன் மரபு ரீதியாக பிணைப்பு கொண்டுள்ள தமிழகத்தில் சீனா முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்த நிலையில் தமிழகத்தில் இந்த முதலீடு அமைய வேண்டும். அதன் மூலமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.