உலக மகா யோக்கிய சிகாமணி சீனா வெளியிட்ட வெள்ளை அறிக்கை..!! தன் மீது எந்த தவறும் இல்லை என பல்டி..!!
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளில் இது மோசமான ஒரு வைரஸ் என்றும், இது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் திறன் கொண்டது என்றும் ஜனவரி 14ஆம் தேதி கண்டறியப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவல் குறித்து உலக நாடுகளை எச்சரிக்க சீனா காலதாமதம் செய்து விட்டது எனவும், நோயை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த சீனா தவறிவிட்டது எனவும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் விமர்சித்து வரும் நிலையில், சீனா கொரோனா வைரஸ் விவகாரத்தில் தான் எடுத்த நடவடிக்கைகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில் எந்தெந்த நாள் என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தெளிவாக விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் விவகாரத்தில் தங்கள் தரப்பில் எந்த தவறும் நிகழவில்லை என்பதை அது வலியுறுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் வுஹானிலிருந்து தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதுவரை உலக அளவில் 71 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை 4 லட்சத்து 6 ஆயிரத்து 344 பேர் உயிரிழந்துள்ளனர். எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரசால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸ் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் முடக்கியுள்ளது, இந்த வைரஸ் பரவலுக்கு சீனா தான் காரணம் எனவும், ஆரம்பத்திலேயே இந்த வைரஸை உலக நாடுகளுக்கு எச்சரிக்க சீனா மறுத்துவிட்டது எனவும், சீனாவிலேயே இந்த வைரஸ் தடுக்கப்பட்டு இருக்கவேண்டும் ஆனால் சீனா அதை தடுக்கதவறிவிட்டது, அதுமட்டுமின்றி இந்த வைரஸ் சீனாவின் வுஹான் ஆய்வுக் கூடத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட வைரஸ் என்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவின் மீது குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கிடையில் சீனாவின் நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார நிறுவனம் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, உலகச் சுகாதார நிறுவனத்திற்கு வழங்கி வந்த நிதியை அமெரிக்கா நிறுத்தியது. இது மட்டுமின்றி கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்திவருகின்றன. இந்நிலையில் வைரஸ் விவகாரத்தில் நேர்மையாக நடந்து கொண்டதாக சீனா பலமுறை வலியுறுத்தியும் உலக நாடுகள் அதை ஏற்க மறுத்துவருகின்றன. இந்நிலையில் கொரோனா விவகாரத்தில் சீனா வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, சீன தகவல் தொடர்பு துறை உதவி தலைவர் சூ லின் நேற்று அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
டிசம்பர் 27-ஆம் தேதி வுஹானில் உள்ள மருத்துவமனைகளில் சளி, காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். அது மற்ற காய்ச்சல்களைவிட சற்று வித்தியாசமாக இருக்கிறது என மருத்துவர்கள் கூறியதை அடுத்து உள்ளூர் அரசு அதை ஆராய நிபுணர்களை அழைத்தது, பூர்வாங்க ஆய்வக சோதனை முடிவில் அது நிமோனியாவை ஏற்படுத்தும் வைரஸ் காய்ச்சல் என தெரிந்தது. இன்னும் சில நாட்களில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்ததைத்தொடர்ந்து ஆய்வுகளும், பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை உறுதி செய்வதற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. மேலும் வுஹானில் ஈரமான சந்தையில் இருந்தே இந்த காய்ச்சல் பரவி இருக்கக் கூடுமென சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அதற்கும் போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. குறிப்பாக அங்கு விற்கப்படும் வவ்வால்கள் மற்றும் பாங்கோலின்கள் மூலம் இது பரவியிருக்கலாம் என விஞ்ஞானிகள் சந்தேகித்தனர். ஆனால் அதற்கும் சான்றுகள் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளில் இது மோசமான ஒரு வைரஸ் என்றும், இது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் திறன் கொண்டது என்றும் ஜனவரி 14ஆம் தேதி கண்டறியப்பட்டது.
அதாவது சீனாவின் முன்னணி சுவாச நோய் நிபுணரான ஜாங் நன்ஷான், இந்த வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதனுக்கு பரவுவதை உறுதிப்படுத்தினார், ஜனவரி 20 ஆம் தேதி, குவாங்டாங் மாகாணத்தில் இருவருக்கு பரவிய தொற்றை வைத்து இது மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் தொற்றுநோய் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வைரஸ் கண்டறியப்பட்டதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும் ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து உலக சுகாதார நிறுவனத்திற்கும், அமெரிக்காவுக்கும் இந்த வைரஸ் குறித்த தகவல்கள் அவ்வப்போது பரிமாறப்பட்டன என அந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.