இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பு மருந்து தயாராகிவிடும் சீன மருந்து நிறுவனமான சினோபார்ம் அறிவித்துள்ளது. இந்த கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.10,800 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் அழையா விருந்தாளியாக 200க்கும் மேற்பட்ட நாடுகளில் அடியெடுத்து வைத்து பெரும் உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. ஏழை, பணக்கார நாடுகள் என்ற பாரபட்சம் இல்லாமல் மனித குலத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. கண்ணுக்கே தெரியாத அந்த நுண்ணுயிரியிடமிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். கொரோனா உருவான சீனாவை விட அமெரிக்கா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பல மடங்கு உயிரிழப்பு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினை தடுத்து நிறுத்துவதற்கு பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இப்படி சுமார் 165 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், எல்லா நாடுகளையும் முந்திக்கொண்டு, தாங்கள் உலகின் முதல் தடுப்பூசியை உருவாக்கி விட்டதாகவும், அதை பதிவு செய்துள்ளதாகவும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த 11-ம் தேதி அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், ஸ்புட்னிக்-5 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையை கடக்கவில்லை என்றும், ரஷியா தடுப்பூசியில் அவசரம் காட்டுவதாகவும், உண்மை தகவல்களை வெளியிடுவதில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த தடுப்பூசி பற்றிய கூடுதல் தகவல்களை ரஷியாவிடம் கேட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. 

இந்நிலையில் ரஷியாவுக்கு போட்டியாக சீனாவும் களத்தில் இறங்கியுள்ளது.  சீன அரசு மருந்து நிறுவனமான சினோபார் கொரோனா வைரசுக்கு Ad5-nCoV என்ற தடுப்பூசி மருத்து கண்டு பிடித்துவிட்டதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் தங்களது தடுப்பூசி விற்பனைக்கு தயாராகி விடும் என  அறிவித்து  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து சினோபார்ம் நிறுவனத்தின் தலைவரான லியூ ஜிங்ஜென் கூறிகையில்;- எங்கள் நிறுவனத்தின் தடுப்பூசி நடப்பாண்டு இறுதியில் விற்பனைக்கு வந்து விடும். இந்த தடுப்பூசியின் விலை 140 டாலருக்கு குறைவாக (சுமார் ரூ.10,500) இருக்கும். இதை 2 டோஸ் போட்டுக்கொள்ள வேண்டியது வரும். முதல் டோஸ் போட்டு, 28 நாளுக்கு பின்னர் அடுத்த டோஸ் போட வேண்டும். முக்கிய நகரங்களில் மாணவர்களும், தொழிலாளர்களும் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட கிராமப்புறங்களில் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளத் தேவையில்லை. எங்கள் நிறுவனம், 2 தடுப்பூசிகளை தயாரித்து பரிசோதித்து வருகிறது. இந்த நிறுவனம், ஆண்டுக்கு 22 கோடி தடுப்பூசிகளை தயாரித்து வழங்கும் ஆற்றலை கொண்டுள்ளது. நானும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளேன். எந்த பக்க விளைவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.