நேபாள பிரதமர்  கேபி ஷர்மா ஓலியின்  ஆட்சியைக் காப்பாற்ற சீன தூதர் ஹவோ யாங்கி நேபாள நாட்டின் உள்ள அரசியல் விவகாரத்தில் தலையிட்டு வருகிறார் என நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின்  எதிர் கோஷ்டியினர் அவர் மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர். நேபாளத்தில் பிரதமர் கே.பி ஷர்மா ஓலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் அவரது செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை எனவும், மக்களின் எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்யவில்லை எனவும் சொந்த கட்சிக்குள்ளாகவே அவருக்கு எதிராக கோஷ்டிப் பூசல் உருவாகியுள்ளது. இந்நிலையில் சீன தூதரின் தலையீடு நேபாள அரசியல் விவகாரத்தில் அதிகரித்திருப்பதாக முன்னாள் பிரதமர் பிரசாந்த தலைமையிலான கோஷ்டியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.ஆண்டாண்டு காலமாக இந்தியாவுடன் நட்பு பாராட்டி வந்த நேபாளம் இந்திய-சீன எல்லை விவகாரத்தையடுத்து  மற்றிலும் சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. 

அதுமட்டுமின்றி இந்திய பகுதிகளான லிபுலேக், லிம்பியதூரா, கலபானி உள்ளிட்ட பகுதிகள் நேபாளத்திற்கு சொந்தமானது என ஷர்மா ஓலி உரிமை கொண்டாடி வருகிறார். அந்த மூன்று பகுதிகளையும் நேபாள எல்லைக்குள் இணைத்து புதிய வரைபடம் ஒன்றையும் அந்நாடு வெளியிட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு முதலே நேபாள பிரதமர் ஓலி எல்லை விகாரத்தில் இந்தியாவுடன் பகை பாராட்டி வரும்நிலையில் தற்போது சீனாவின் ஆதரவால் அந்த பகை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு வகையில்  நேபாளத்தின் வளர்ச்சிக்கு இந்தியா உறுதுணையாக இருந்து வந்த நிலையில் நேபாளம் சீனாவுடன் கைகோர்த்துக்கொண்டு இந்தியாவை எதிர்த்து வருகிறது. இது அத்தனைக்கும் காரணம் நேபாள நாட்டுக்கான சீன தூதர்  ஹவோ யாங்கியே என கூறப்படுகிறது. இந்தியா, அமெரிக்காவுடன் நட்பு பாராட்டி வரும் நிலையில், அதை சகித்துக்கொள்ள முடியாத சீனா, பாகிஸ்தான், நேபாளம்  உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து இந்தியாவை எதிர்த்து வருகிறது. முழுக்க முழுக்க சீனாவின் கைப்பாவையாக தற்போதைய நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் அந்நாட்டின் பிரதமருமான ஷர்மா ஓலி மாறி உள்ளார். 

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான அவரது நிலைப்பாட்டை விரும்பாத கம்யூனிஸ்டு கட்சியின் பிற முக்கிய உறுப்பினர்கள் பிரதமர் ஓலிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.  அக்கட்சியின் செயல் தலைவராக உள்ள முன்னாள் பிரதமர்  பிரசாந்தா தலைமையிலான கோஸ்டி ஷர்மா ஓலியை எதிர்த்து வருகிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை ஷர்மா ஓலி பூர்த்தி செய்யவில்லை என்று கூறி அவரை பதவி விலகுமாறு பிரசாந்தா ஆதரவாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். இந்தியாவுக்கு எதிராக நேபாள அரசு புதிய வரைபடம் உருவாக்கியதை பிரசாந்தா ஆதரவாளர்கள் விரும்பவில்லை. மேலும் இந்தியாவுக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சர்மா ஓலி கூறி வருவதாகவும் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் சக்திவாய்ந்த 45 உறுப்பினர்களின் மனநிலை  பிரதமர் ஓலிக்கு எதிராகவே உள்ளது.  இந்நிலையில் அவரின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யும்  கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை குழுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை நடப்பதாக இருந்த நிலையில், அது சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது,  இந்நிலையில் அந்தக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் ஷர்மா ஓலியின் பதவியை காப்பாற்றுவதற்கான நடவடிக்கையில் சீன தூதர்  ஹவோ யாங்கி தீவிரம் கட்டிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஹவோ யாங்கி, ஷர்மா ஓலிக்கு ஆதரவாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட அதிர்ப்தி அடைந்த நேபாள தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள அதிர்ப்தி மனநிலையை தனித்து ஷர்மா ஓலியின் பதவியை தக்க வைக்க அவர் முயற்சித்து வருவதாகவும் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவுறுத்தலின்படி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தை சீன தூதர் நேபாளத்தில் செயல்படுத்த முயற்சித்து வருவதாகவும் அவர் மீது  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மாதவ் குமார் உடன் சீனத் தூதர் சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார், உடன் அந்நாட்டின் ஜனாதிபதி பித்யா பண்டாரியையும் சந்தித்து கே.பி ஷர்மா ஓலிக்கு ஆதரவாக பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. ஷர்மா ஓலி பிரதமர் பதவியில் இருந்தால் மட்டுமே நேபாளத்தை முழுமையாக இந்தியாவுக்கு எதிராக செயல்படுத்த முடியும் என்பதால் சீனா தன் தூதர் மூலம் ஓலியின் பதவியைக் காப்பாற்ற போராடி வருவதாக கூறப்படுகிறது.