#UnmaskingChina:எல்லையில் இருந்து படைகளை பின்வாங்கிய சீனா..!! கெத்து காட்டிய இந்திய ராணுவம்..!!
இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீனா தனது படைகளை பின்னோக்கி நகர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இரு நாட்டு ராணுவ தளபதிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீனா தனது படைகளை குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பின்னோக்கி நகர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே மோதல் ஏற்படக் கூடுமென கணிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சீன ராணுவம் வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியா-சீனா இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது, கடந்த ஜூன்-15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வன்முறை தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து சீனா எல்லையில் படைகளை குவித்துவருவதால் இரு நாட்டுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழல் நிலவி வருகிறது, இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் லடாக் பகுதிக்கு விரைந்த இந்திய பிரதமர் மோடி அங்கு ராணுவ வீரர்கள் மத்தியில் வீர உரையாற்றினார். இது சீனா மட்டுமின்றி சர்வதேச நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தது.
அப்போது சீனாவின் பெயரை குறிப்பிடாமல் எச்சரித்த பிரதமர் மோடி, எல்லை விரிவாக்கத்திற்கான சகாப்தம் முடிந்துவிட்டது, இனி வளர்ச்சிக்கான காலம் என எச்சரித்தார். மோடியின் பேச்சு சீனாவை மிகுந்த கலக்கமடைய வைத்தது, அவரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான், சீனா விரிவாக்க எண்ணம் கொண்ட நாடு என கூறுவது முற்றிலும் தவறானது, இது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என கூறியதுடன், இரு நாட்டுக்கும் இடையே ராணுவ ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் இது போன்று பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையிலும் இந்தியா ஈடுபட வேண்டாமென கேட்டுக்கொண்டார். ஆனால் இந்தியா போருக்கு தயாராகவே இருக்கிறது என்றவகையில் மோடியின் உரை அமைந்தது. இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீனா தனது படைகளை பின்னோக்கி நகர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
கல்வான்பகுதியை கோக்ரா மற்றும் ஹாட் ஸ்பிரிங் ஆகிய உரசல் நிறைந்த பகுதியில் இருந்து படைகள் விலக்கம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் படி தனது படைகளை சீனா விலக்கி உள்ளதாக இந்திய படைகள் ஆராய்ந்து உறுதி செய்துள்ளன. இதே நிலை தொடர்ந்தால் இரு நாட்டுக்கும் இடையிலான பிரச்சனை விரைவில் தீரும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர், இதற்கு முன்னரே பலமுறை பின் வாங்குவதாக சீனா கூறியிருந்தாலும், இந்த முறை அது உறுதி செய்யப்பட்டுள்ளது. முழுமையாக படைகள் பின்வாங்க இன்னும் காலதாமதம் ஆகலாம் எனவும் கூறப்படுகிறது, கடந்த ஜூன் 30ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ரோந்து பாயிண்ட் 14,15, 17 ஆகிய பகுதிகளிலிருந்து படைகளை விலகிக் கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டது, இந்நிலையில் ரோந்து பாயிண்ட் 14 -ல் சீனா அமைத்திருந்த கூடாரங்களை காலி செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஆனால் பாங்கொங் த்சோ பகுதியின் நிலைமை பழையபடியே தொடர்வதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் இந்திய படைகளும் அப்பகுதியிலிருந்து பின் வாங்கியுள்ளதாகவும், கல்வான் நதிப் பகுதியில் உள்ள சீன கனரக வாகனங்கள் இன்னும் பின்வாங்கவில்லை எனவும், நிலைமையை இந்திய ராணுவம் எச்சரிக்கையுடன் கண்காணித்து வருவதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.