உலக சுகாதார நிறுவனத்திற்கு  நிறுத்தப்பட்ட நிதி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மறுபரிசீலனை  செய்வார் என நம்புவதாக ஐநா மன்றத்திற்கான சீன தூதர் சென் சூ  தெரிவித்துள்ளார் ,  ஐநாவின் சார்பில் வளர்ந்துவரும் நாடுகளுக்கான  தடுப்பூசிகள் மற்றும் கோவிட்-19 சிகிச்சையை விரைவு படுத்துவதற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீன தூதர் இவ்வாறு கூறினார் , கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் நிலையில் மற்ற நாடுகளை விட அந்த வைரஸால் அமெரிக்காவே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது , இதுவரை அமெரிக்காவில் மட்டும் சுமார் 12 லட்சம் பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரமாக உயர்ந்துள்ளது .  அதற்கடுத்தபடியாக இத்தாலி ஸ்பெயின் பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில்  பாதிப்பு மிக மோசமாக உள்ளது.  ஆனாலும் இந்த வைரஸை இன்னும் கூட உலக நாடுகளால் கட்டுப்படுத்த முடியவில்லை . 

இந்நிலையில் ஒட்டு மொத்த நாடுகளின் கோபமும் சீனா மீது திரும்பி உள்ளது ,  உலகில் இந்த அளவிற்கு மோசமான பாதிப்புகள் ஏற்படுவதற்கு சீனா தான் காரணம் முன்கூட்டியே சீனா இந்த  வைரஸ் குறித்து எச்சரித்திருந்தால்  உலகில் இந்த அளவிற்கு உயிரிழப்புகளும் பொருளாதார பேரிழப்புகளும்  ஏற்பட்டிருக்காது ,  இத்தனை பிரச்சனைகளுக்கும் சீனா தான் காரணம்.   இதற்கு  சீனா பதில்  சொல்லியே ஆகவேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது ,  அதுமட்டுமல்லாமல் சீனாவுடன் கைகோர்த்துக்கொண்டு உலக சுகாதார நிறுவனமும் தனது கடமையிலிருந்து  தவறிவிட்டது. சீனாவுக்கு மக்கள் தொடர்பு நிறுவனம் போல உலக சுகாதார  நிறுவனம் நடந்துகொள்கிறது என கோபம் கொப்பளிக்க குற்றச்சாட்டை முன்வைத்த ட்ரம்ப்  உலகச் சுகாதார நிறுவனத்திற்கு வழங்கிவரும் நிதியை  நிறுத்தியுள்ளார், இந்நிலையில் கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும்  பனிப்போர் நீடித்து வருகிறது . 

இந்நிலையில் வளர்ந்துவரும் நாடுகளுக்கு தடுப்பூசிகள் மற்றும் கோவிட்-19 சிகிச்சையை விரைவுபடுத்த ஐரோப்பிய நாடுகள் மற்றும் கேட்ஸ் அறக்கட்டளை போன்ற குழுக்கள் தலைமையில் உலகச் சுகாதார நிறுவனம் நிதி திரட்டும் வேலையில் இறங்கியுள்ளது .  இந்நிலையில் இந்த முயற்சிக்கு தனது ஆதரவை தெரிவித்துக்கொண்ட  ஐநாவுக்கான சீன தூதர் சென் சூ  ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்தார் ,  ஐநாவின் இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது ,  WHO மற்றும் அதன் தலைவர் டெட் ரோஸ் அதானோம்  ஆகியோருக்கு சீனாவின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் ,  ஐநாவின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் டெட் ரோஸ் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் .  உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கைகள் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறது  என தெரிவித்த சென் ,  உலகச் சுகாதார நிறுவனத்தின்  நிதியத்திற்கு சீனா எவ்வளவு உதவி வழங்கும் என்பது குறித்த விபரங்கள் தன்னிடம் இல்லை எனக் கூறினார். 

அப்போது,  அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கி வந்த நிதியை நிறுத்தியது  குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டதற்கு ,   அமெரிக்கா  உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதி வழங்குவது ஒரு கடமையாக கருத வேண்டும் ,  விரைவில் நிதி வழங்குவது குறித்து அமெரிக்க மறுபரிசீலனை செய்யும் என நம்புகிறோம் அமெரிக்கா மீண்டும் சரியான பாதைக்கு வரும் என எதிர்பார்க்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார் ,அதேபோல் கூடவே வைரஸ் தோற்றம் குறித்து விசாரிக்க வல்லுநர் குழுவை அனுமதிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ,  எந்த ஒரு விசாரணைக்கும் தனது நாடு எதிரானது அல்ல ஆனால் தற்போதைக்கு அதைவிட எங்களுக்கு பல முக்கிய வேலைகள் இருப்பதால்,  அதை இப்போதைக்கு அனுமதிக்க நாங்கள் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார் .