சீனாவில் மீண்டும் தனிமை முகாம்கள் தற்காலிக மருத்துவமனைகள்; அதிர வைக்கும் தகவல்கள்!!
சீனாவில் அதிகளவில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக குவாங்சவ் நகரில் 2.50 லட்சம் பேர் தங்கும் வகையில் பெரிய அளவிலான தனிமை முகாம்கள் மற்றும் தற்காலிக மருத்துவமனைகளை பெரிய அளவில் பீஜிங் அரசாங்கம் அமைத்து இருக்கிறது. இதற்கான புகைப்படங்கள் வெளியாகி பெரிய அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று அதிகரிப்பது, குறைவதுமாக இருந்து வருகிறது. சீனாவில் இருந்துதான் கோவிட் 19 தொற்று வைரஸ் உருவானது என்று பரவலாக கூறப்பட்டது. தொடர்ந்து இதை சீனா மறுத்து வந்தது. இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதையும் கிடுகிடுக்க வைத்த கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்தியாவில் பெரிய அளவில் இந்த தொற்றின் வீரியம் குறைந்து இருக்கிறது. ஆனால், சீனாவில் தற்போது பெரிய அளவில் அதிகரித்து வருகிறது.
இதனால் அந்த நாட்டில் பொருளாதாரம் மீண்டும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருக்கிறது. உற்பத்தி வெகுவாக குறையும் நிலை உருவாகி இருக்கிறது. குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் தயாரிக்கும் பாக்ஸ்கான் ஆலையில் பெரிய அளவில் கடந்த வாரங்களில் போராட்டம் வெடித்தது. ஊழியர்கள் வேலியை தாண்டி தப்பிச் சென்றனர். இந்த ஆலையின் ஊழியர்கள் ஜீரோ கோவிட் என்ற பெயரில் அடைத்து வைக்கப்பட்டதாகவும், உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் கடந்த வாரம் போராட்டம் நடந்தது. இந்த நிலையில், மேலும் கொரோனா தொற்று சீனாவில் அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.
Covid in China: சீனாவில் ‘ஜூரோ கோவிட்’ சரிவராது!அமைதியாக போராடலாம்! ‘மக்களை உசுப்பேற்றும் அமெரிக்கா
குறிப்பாக சீனாவில் இருக்கும் முக்கிய நகரமான குவாங்சவ் நகரில் 1 கோடியே 30 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு கொரோனா தற்போது தலைவிரித்தாடுகிறது. கடந்த அக்டோபர் மாத துவக்கத்தில் இருந்து இங்கு கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை இந்த நகரில் சுமார் 7000 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த நகரில் தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் தனிமை முகாம்கள் என உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் 2.50 லட்சம் பேர் ஒரே நேரத்தில் தங்கும் அளவிற்கு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தனிமை முகாம்களின் கட்டுமான காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுகின்றன. NEXTA என்ற கிழக்கு ஐரோப்பிய ஊடகம், சுமார் 80,000 பேருக்கும் அதிகமான பேர் தற்போது தங்க வைக்கப்பட்டு இருக்கும் முகாம்களின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது.
கொரோனா தொற்றுகள் அதிகரித்து வருவதால், தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் தனிமை முகாம்களின் கட்டுமானப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 2,46,407 படுக்கைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹைலு நகரில் இருந்து 95,300 பேரை தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களுக்கு அல்லது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி இருப்பதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், சீனாவின் தலைநகரான பெய்ஜிங் மற்றும் மற்ற முக்கிய நகரங்கள் கொரோனாவை கட்டுப்படுத்த தொடர்ந்து போராடி வருகின்றன. சோங்கிங் மற்றும் குவாங்சவ் நகரங்களில் புதிதாக கொரோனா தொற்று பரவி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், செவ்வாய் கிழமை சீனாவில் புதிதாக 38,645 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 3,624 பேருக்கு கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. 35,021 பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லை. இதற்கு முந்தைய நாள் தொற்று பாதிப்பு 40,347 ஆக இருந்துள்ளது. சமீபத்திய தகவலில், நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக பீஜிங் அரசாங்கம் தெரிவித்துள்ளது.