தலிபான்களை கொண்டாடும் சீனா... அமெரிக்காவை கிண்டலடித்து வெளியிட்ட வீடியோ..!
வாழ்க்கை எங்கும் நகரவில்லை என்று நீங்கள் உணரும்போது, சிந்தித்து பாருங்கள். ஆப்கானிஸ்தான் தாலிபான்களிடமிருந்து தாலிபான்களுக்கே வந்து விட்டது
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக தலிபான்களுக்கும், அமெரிக்க படைகளுக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது. அண்மையில், அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் தங்கள் ராணுவ துருப்புகளை திரும்பப் பெற்றுக்கொண்ட நிலையில், ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற அமெரிக்கா ஒப்புக்கொண்டதை சீன ஊடகம் ஒன்று கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை கைப்பற்றி நாடாளுமன்றத்துக்குள் புகுந்து தலைநகரை கைப்பற்றினர். அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனியும் தப்பித்து சென்றுவிட்டார். இதனால் ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் கட்டுக்குள் வந்துவிட்டது. அதனால், ஆப்கானியர்கள் தாலிபான்களின் பிடியில் இருந்து தப்பிக்க துடித்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், சீனாவின் ஷினுவா செய்தி ஏஜென்சி அமெரிக்காவை கிண்டல் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. “வாழ்க்கை எங்கும் நகரவில்லை என்று நீங்கள் உணரும்போது, சிந்தித்து பாருங்கள். ஆப்கானிஸ்தான் தாலிபான்களிடமிருந்து தாலிபான்களுக்கே வந்து விட்டது. 4 அமெரிக்க அதிபர்கள், 20 ஆண்டுகள். 2 டிரில்லியன் டாலர்கள், 2400 ராணுவ வீரர்களின் உயிரிழப்புக்கு பின் மீண்டும் ஆப்கானிஸ்தான் ஆட்சி தாலிபான்களுக்கே வந்துவிட்டது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று அமெரிக்கா கூறியது, ஆனால், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதக் குழுக்களின் எண்ணிக்கை, 20 ஆண்டுகளில் ஒற்றை இலக்கத்திலிருந்து இரட்டை இலக்கமாக அதிகரித்து 20-ஐ கடந்துள்ளது. ஒரு லட்சம் ஆப்கான் குடிமக்கள் கொல்லப்பட்டனர். ஒரு கோடிக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர். இந்தப் போரினால் 60 மில்லியன் டாலர்கள் நாளொன்றுக்கு செலவானது. வியட்நாம் போரை விட மோசமானதாக உள்ளது” என கிண்டல் செய்துள்ளது சீன ஊடகம்.