ஆதாரங்களை வெளியிட தயங்க வேண்டாம்..!! அமெரிக்காவிடம் வீராப்பு காட்டிய சீனா..!!
கோவிட் -19 க்கு தடுப்பூசி ஒன்றை உருவாக்கும் மேற்கத்திய நாடுகளின் முயற்சிகளை நாசப்படுத்த சீனா தீவிரமாக முயல்கிறது என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள சீனா, அதற்கான ஆதாரங்களை வழங்குமாறு அமெரிக்க செனட் உறுப்பினருக்கு சவால் விடுத்துள்ளது.
கோவிட் -19 க்கு தடுப்பூசி ஒன்றை உருவாக்கும் மேற்கத்திய நாடுகளின் முயற்சிகளை நாசப்படுத்த சீனா தீவிரமாக முயல்கிறது என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள சீனா, அதற்கான ஆதாரங்களை வழங்குமாறு அமெரிக்க செனட் உறுப்பினருக்கு சவால் விடுத்துள்ளது. குடியரசுக் கட்சியின் செனட் உறுப்பினர் ரிக் ஸ்காட் சமீபத்தில் பிபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது, கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கும் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் முயற்சிகளை சீர்குலைக்க சீனா, தீவிரமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார். "கம்யூனிஸ்ட் சீனா எங்களை நாசப்படுத்தவும் வளர்ச்சியை தடுக்கவும் முயற்சிக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் நிறைய உள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் முதலில் தடுப்பூசியை கண்டுபிடிப்பதை சீனா விரும்பவில்லை. அவர்கள் அமெரிக்கர்களுக்கு விரோதியாக செயல்பட முடிவு செய்துள்ளனர், உலகெங்கிலும் உள்ள மக்களின் நிலைமையை நான் எண்ணிபார்க்கிறேன்", என்று ஸ்காட் கூறினார். மேலும் இந்த தகவலை அமெரிக்காவின் உளவுத்துறை தனக்கு வழங்கியதாகவும் ஸ்காட் கூறினார், ஆனால் அது தொடர்பான கூடுதல் தகவல்களை அவர் வெளியிடவில்லை.
இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங்கின், ஸ்காட் குற்றச்சாட்டுக்கு காட்டமாக பதிலளித்தார். "இந்த சட்டமன்ற உறுப்பினர், மேற்கு நாடுகளின் தடுப்பூசி வளர்ச்சியை சீனா நாசப்படுத்த முயற்சிக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் நிறைய இருப்பதாகக் கூறியதால் கேட்கிறேன், தயவுசெய்து அவர் ஆதாரங்களை வெளியிட வேண்டும், இதில் அவர் வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை" என்று கடந்த திங்கட்கிழமை நடந்த அமைச்சக மாநாட்டின் போது நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். கோவிட் -19 தடுப்பூசியை உருவாக்குவது இருதரப்புக்கும் இடையேயான போட்டி அல்ல என்றும், சீனாவின் உறுதிமொழியை வாஷிங்டன் பிரதிபலிக்கும் என்றும், அது உருவாக்கும் எந்தவொரு தடுப்பூசியையும் உலகிற்கு இலவசமாக வழங்கும் என்றும் பெய்ஜிங் நம்புகிறது என அவர் கூறினார். சீனா தனது கோவிட் -19 தடுப்பூசியை உலகளாவிய பொது நன்மைக்கு வழங்கும். தடுப்பூசி மேம்பாடு, மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பயன்பாடு ஆகியவற்றில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் வாங் ஜிகாங் பெய்ஜிங்கில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
"தடுப்பூசி தயாரிப்பு, பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்தல்" போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்என சீனா ஏற்கனவே தெரிவித்துள்ளது என்றார். சீனா தற்போது COVID-19 தடுப்பூசிகளை ஐந்து பிரிவுகளாக உருவாக்கி வருகிறது - செயலற்ற தடுப்பூசிகள், மறுசீரமைப்பு புரத தடுப்பூசிகள், நேரடி அட்டென்யூட்டட் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகள், அடினோவைரஸ் தடுப்பூசிகள் மற்றும் நியூக்ளிக் அமிலம் சார்ந்த தடுப்பூசிகள் என அவற்றை வகைப்படுத்தினார். இதற்கிடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் பேசிய துணை வெளியுறவுத்துறை அமைச்சர் மா ஜாக்சு, கோவிட் -19 க்கான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளின் ஆராய்ச்சியை விரைவுபடுத்துவதற்காக உலக சுகாதார அமைப்பால் தொடங்கப்பட்ட சர்வதேச ஒத்துழைப்பு முயற்சியில் சீனா பங்கேற்றுள்ளது என்றார். கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டு வந்த மோதல் தடுப்பூசி உருவாக்குவதிலும் ஏற்பட்டு வருவது குறிப்பிடதக்கது.