சீனாவில் கொரோனா வைரஸ் தனது கொடூர முகத்தை காட்ட தொடங்கி உள்ள நிலையில் இதுவரை இந்த நோய்க்கு 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ‘ஓம் தரே டுட்டாரி ட்டுரு சோஹா’ என்ற மந்திரத்தை சொல்லுங்கள் என புத்தமதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. வவ்வால்களை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் இந்த வைரஸ் பரவியது. கட்டுவிரியன் பாம்புகளை சூப் வைத்தும், உணவாகவும் சீன மக்கள் சாப்பிட்டதால் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கும் பரவியது. 

மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு நேரடியாக பரவும் இந்த வைரசுக்கு சீனாவில் இதுவரை 131 பேர் உயிழந்துள்ளனர். மேலும், 4515 பேர் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், பல்வேறு நகரங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் செய்வது அறியாமல் மக்கள் திகைத்துள்ளனர். 

இந்நிலையில், சீனாவில் உள்ள புத்தமதத்தை பின்பற்றும் சிலர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அறிவுரை வழங்கும்படி இமாச்சல பிரதேசம் மாநிலம் தரம்சாலாவில் உள்ள திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமாவுக்கு முகநூல் மூலம் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்கள் ‘ஓம் தரே டுட்டாரி ட்டுரு சோஹா’ என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து மன அமைதி மற்றும் கவலையில் இருந்து விடுபடலாம். இந்த மந்திரத்தை உச்சரித்தால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தி நன்மையை அளிக்கும், என தலாய் லாமா தெரிவித்தார்.