நாட்டுக்குள் நுழைய அதிபர் புதினுக்கு அதிரடி தடை... கனடா அதிரடி..!
அந்த வரிசையில் தான் தற்போது கனடாவில் அதிபர் புதின் மற்றும் ஆயிரம் ரஷ்யர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அந்நாட்டை சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் கனடாவுக்குள் நுழைய கனடா அரசு தடை விதித்து உள்ளது. உக்ரைன் உடனான போர் காரணமாக இந்த நடவடிக்கையை கனடா எடுத்துள்ளது. இந்த தகவலை கனடாவுக்கான பொது பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்கோ மெண்டிசினோ தெரிவித்தார்.
“புதின் ராணுவத்தின் மிக கொடூர தாக்குதல் விவகாரத்தில், கனடா உக்ரைனுக்கு ஆதரவாக நிற்கும். ரஷ்யா செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். இதன் காரணமாகவே அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அவருக்கு நெருக்கமான ஆயிரம் ரஷ்யர்களை கனடாவுக்குள் நுழைய தடை விதித்து இருக்கிறோம்,” என மெண்டிசினோ தெரிவித்தார்.
போர்:
உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை எடுப்பதாக கூறி, ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது கொடிய தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய தாக்குதலில் உக்ரைன் நாளுக்கு நாள் சிதைக்கப்பட்டு வருகிறது. இரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். பலர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல நாடுகள் ரஷ்யா மீது தடை மற்றும் பொருளாதார கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அந்த வரிசையில் தான் தற்போது கனடாவில் அதிபர் புதின் மற்றும் ஆயிரம் ரஷ்யர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ரஷ்யாவுடனான போரில் வெற்றி பெற உக்ரைனுக்கு உலகின் பல நாடுகளும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகின்றன. பல நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ராணுவ ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் நிதி உதவி வழங்கி வருகின்றன. போரில் வெற்றி பெறும் நோக்கில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து அண்டை நாட்டு அதிபர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
கேன்ஸ் திரைப்பட விழா:
இதனிடையே 75 ஆவது கேன்ஸ் திரைப்பட நிகழ்ச்சியில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி மூலம் உரை ஆற்றினார். உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்து திரைப்படம் எடுக்க தயாரிப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் 1940 ஆம் ஆண்டு வெளியான தி கிரேட் டிக்டேட்டர் திரைப்படத்தில் சார்லி சாப்ளின் பேசும் வசனங்களை மேற்கோள் காட்டி இருந்தார்.