ஓடும் பேருந்தில் திடீர் தீவிபத்து - உடல் கருகி 52 பேர் சம்பவ இடத்திலேயே பலி...!
ரஷ்யாவில் ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதில் பயணிகள் 52 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
ரஷ்யாவின் சமரா நகரில் இருந்து, கஜகஸ்தான் நாட்டின் ஷிம்கென்ட் நகருக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் 57 பேர் பயணம் செய்துள்ளனர்.
இவர்கள் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது. 2,200 கிமீ தொலை தூர பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் பயணம் செய்த பேருந்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து இதுகுறித்து தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர், பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தீயின் வேகம் கடுமையாக இருந்ததால் மீட்கும் பணி தாமதப்பட்டது.
ஆனால் முழுமையாக மீட்பதற்குள் தீயில் கருகி 52 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். தீவிபத்திற்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.