பிரிட்டனில் புதிய வகை வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், அந்நாட்டுக்கான விமானம் மற்றும் சாலை போக்குவரத்தை பல்வேறு நாடுகள் தடை செய்துள்ளன. ஆனாலும் நல்லெண்ணம் கருதி நிவாரணம் மற்றும் உதவிப் பொருட்களை தொடர்ந்து வினியோகிக்க பிரான்ஸ் முன்வந்துள்ளது.

புதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் வேகமாக பரவி வருவதால் பெரும்பாலான நாடுகள் பிரிட்டன் உடனான விமானப் போக்குவரத்தை துண்டித்துள்ளன. கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க முதன்முதலாக பைசர் நிறுவனத்தின் தடுப்பு  மருந்துக்கு அனுமதி அளித்தது பிரிட்டன் அரசுதான். ஆனால் தற்போது அங்கு புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், அங்கு கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள்  கடுமையாக்கப்பட்டுள்ளதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் லண்டன் நகர சாலைகளில் மக்கள் கூட்டம் பெருமளவில் குறைந்துள்ளது. பிரிட்டனுடனான எல்லைகளை பல்வேறு நாடுகள் மூடி விட்டதால் சரக்குகளை ஏற்றி வரும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் எல்லையில் சாலையில் அணிவகுத்து நிற்கின்றன. 

புதிய வகை வைரஸ் பிரிட்டன் முழுவதும் வேகமெடுத்துள்ளதால் கனடா, அயர்லாந்து, நெதர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், சவுதி அரேபியா, சிலி, அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகள் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களை ரத்து செய்துள்ளது. பிரிட்டனில் முக்கிய பகுதிகள் அனைத்திலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவித்து வருகின்றனர். வைரஸ் பரவலைத் தொடர்ந்து ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. பல்வேறு நாடுகள்  பிரிட்டனுடனான எல்லையை மூடி உள்ளதாலும், ஐரோப்பா மற்றும் பிரிட்டனில் கிறிஸ்மஸ்  பண்டிகை என்பதாலும் அங்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் நல்லெண்ண அடிப்படையில் பிரிட்டனுக்கான எல்லையை பிரான்ஸ் திறந்துள்ளது. பிரான்சிலிருந்து பிரிட்டனுக்கு நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரான்சு சில நிபந்தனைகளுடன்  சாலைபோக்குவரத்தை திறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஃபிரான்ஸில் எல்லையை மூடி விட்டால் நிச்சயம் சில அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை பிரிட்டனில் தொடங்கியிருக்கலாம்  எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் எல்லையில் நூற்றுக்கணக்கான லாரிகள் நிற்கின்றன. பிரான்சில் இருந்து பிரிட்டனுக்குள் நுழையும் லாரி ஓட்டுநர்களுக்கு இரண்டு முறை பரிசோதனை செய்த பின்னரே அவர்கள் இங்கிலாந்து எல்லைக்குள் நுழைய முடியும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.