கராச்சி தாக்குதல்- ஒருத்தரும் தப்பிக்கக் கூடாது - பாக்.-ஐ உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் சீனா
தற்கொலைப் படை தாக்குதல் குறித்து முழு விசாரணை நடத்தி, தொடர்புடையவர்களை கடுமையாக தண்டிக்க சீனா அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கராச்சி தற்கொலைப் படை தாக்குதல் சம்பவத்தை அடுத்து பாகிஸ்தானுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தாக்குதலில் உயிரிழந்த சீனர்களின் ரத்தம் வீண் போகாது என்றும் தெரிவித்து இருக்கிறது.
பாகிஸ்தானில் பணியாற்றி வரும் சீனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சீனா அரசு வலியுறுத்தி இருக்கிறது. மேலும் கராச்சி தற்கொலைப் படை தாக்குதல் குறித்து முழு விசாரணை நடத்தி, தொடர்புடையவர்களை கடுமையாக தண்டிக்க சீனா அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
சி.சி.டி.வி. வீடியோ:
பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் மூன்று சீனர்கள் உள்பட மொத்தம் நான்கு பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானை சேர்ந்த உள்ளூர் மாணவர்களுக்கு சீன மொழியைக் கற்று கொடுக்கும் கன்புசியஸ் இன்ஸ்டிடியூட் அருகே இந்த தாக்குதல் நிகழ்ந்தது. தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில், தற்கொலைப் படையை சேர்ந்த பெண் ஒருவர் வெடிகுண்டை உடலில் அணிந்து வந்து வெடிக்க வைத்தது சி.சி.டி.வி. வீடியோ மூலம் தெரிய வந்தது.
குண்டுவெடிப்பில் சீனர்களை ரத்தம் சிந்த வைத்தவர்கள் நிச்சயம் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சீனர்கள் சிந்திய ரத்தம் வீணாகக் கூடாது. இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் ஒவ்வொருத்தரும் அதற்கான விலையை கொடுத்தே தீர வேண்டும் என சீனா தெரிவித்து இருக்கிறது.
பாகிஸ்தான் விடுதலை ராணுவ அமைப்பு:
கராச்சி பல்கலைக்கழக தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தான் விடுதலை ராணுவ என்ற அமைப்பு பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்து உள்ளது. இந்த அமைப்பு, பலுசிஸ்தானில் இருந்து சீனா மற்றும் பாகிஸ்தான் உடனடியாக பின்வங்க வேண்டும் என அந்த அமைப்பு இரு நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
பாகிஸ்தான் விடுதலை ராணுவ அமைப்பில் தற்கொலைப் படையாக மாறி தாக்குதல் நடத்திய பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்றும் இவரின் கணவர் மருத்துவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.