பைரேட்ஸ் ஆஃப் கரிபீயன் படத்தின் புதிய அத்தியாயத்தில் முன்னணி நடிகர் ஜானி டெப் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

ஜானி டெப் என்றால் யாரென்று தெரியாத பலருக்கும், ஜாக் ஸ்பாரோ என்று சொன்னவுடன் முகம் மலர்ந்து விடும். காரணம், பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் படங்கள் தான். இந்தப் படத்தில் அவர் கொள்ளைக் கூட்டத் தலைவனாகவே வாழ்ந்திருப்பார். சீரியசான காட்சிகளில் கூட இவர் செய்யும் சேட்டைகள் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடும். இந்தப் படத்தில் இவர் அணிந்திருந்த ஆடையும் இவருக்காக உருவாக்கப்பட்டதைக் போல் கண கச்சிதமாக இருக்கும். இப்படத்தில் இவர் உடல் மொழியும் நமக்கு சிரிப்பைத் தான் வரவழைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்த்த இந்த நடிகர் தான் ஜானி டெப். 

த குரூஸ் ஆஃப் த பிளாக் பேர்ல் என்ற முதல் பாகம் தொடங்கி 2017ஆம் ஆண்டு வரை வெளியான ஐந்து பாகங்களிலும் மனிதர் கலக்கி இருப்பார். இந்த ஐந்து பாகங்களும் உலகம் முழுவதும் 33 ஆயிரம் கோடி ரூபாய் வசூலை ஈட்டின. பிளாக் பேர்ல் என்ற கப்பல் இந்தப் படத்தின் பேசாத கதாப்பாத்திரமாக இருக்கும். இந்தக் கப்பலைச் சுற்றித் தான் கதை நகரும். 

இந்தப் படங்களை அதிகம் நேசிக்கும் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தியும் உண்டும், ஒரு கெட்ட செய்தியும் உண்டு. நல்ல செய்தி என்னவென்றால், பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் படத்தை ரிபூட் செய்ய, அதாவது புத்தாக்கம் செய்ய டிஸ்னி திட்டமிட்டுள்ளது. கெட்ட செய்தி என்னவென்றால் இதில் ஜாக் ஸ்பாரோவாக ஜானி டெப் இருக்க மாட்டார். பொதுவாக படங்கள் ரிபூட் ஆகும் போது முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்தவர்கள் மாறுவது சகஜம் தான். ஆனால் பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் என்று சொன்னாலே டக்கென நினைவுக்கு வரும் ஜானி டெப்பை மாற்றினால் எப்படி என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. 

டெட்பூல் படக் கதைகளை எழுதிய ரெட்ட் ரீஸ் மற்றும் பால் வெர்னிக் ஆகியோரை வைத்து பைரேட்ஸ் ஆஃப் கரீபியனின் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறது டிஸ்னி நிறுவனம். ஆனால் இதில் ஜாக் ஸ்பாரோவாக ஜானி டெப் இல்லை என்று முதல் பாகத்தை இயக்கிய ஸ்டூவர் பீட்டி தெரிவித்துள்ளார். ஜாக் ஸ்பாரோ என்ற கதாப்பாத்திரத்துக்கே உரித்தான ஜானி டெப் புதிய அத்தியாயத்தில் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். ஜானி டெப்பை சுற்றி வளைத்துக் கொண்டிருக்கும் நிதி மற்றும் சட்ட ரீதியான சர்ச்சைகள் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.