ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலின் போது, போர் விமான குண்டுவீச்சில் கொல்லப்பட்டார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமா இன்று அறிவித்தார்.

கடந்த 2001 செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகர உலக வர்த்தக மையத்தின் மீது அல்-காய்தா தீவிரவாதிகள் விமானத்தை மோதி தாக்குதல் நடத்தினர். இதில் 2977 பேர் உயிரிழந்தனர். 6,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.இதற்குப் பதிலடியாக பாகிஸ் தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை கடந்த 2011 மே 2-ம் தேதி அமெரிக்க கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.தற்போது அல்-காய்தாவின் தலைவராக அல்-ஜவாஹிரி உள்ளார். அவருக்கு அடுத்து ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன், தலைவர் பதவியை ஏற்பார் என்று தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டில் அவரை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா பட்டியலிட்டது. அவரது தலைக்கு ரூ.7 கோடி பரிசுத் தொகையையும் அறிவித்தது.

ஒசாமா பின்லேடன் குடும்பத்தினர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள் ஆவர். அதன்படி ஹம்சா பின்லேடனும் சவுதி அரேபியா குடியுரிமை பெற்றிருந்தார். அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று கடந்த 2017-ம் ஆண்டு ஹம்சாவின் குடியுரிமையை சவுதி அரேபியா ரத்து செய்தது. ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ஹம்சா தலைமறைவாக வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகிவந்தன.இந்நிலையில், போர் விமான குண்டுவீச்சு தாக்குதலில் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டார் என்று அமெரிக்க உளவுத் துறையின் 3 மூத்த அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்தனர்.  இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிடம் விளக்கம் கோரியபோது, அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையின்போது ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் குண்டுவீச்சில் கொல்லப்பட்டார் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகை விடுத்த அறிக்கையில், “ ஹம்சா பின்லேடனின் இழப்பு அல்கொய்தா தலைமைக்கு மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தும், ஒசாமாவை இழந்ததைப்போல் இருக்கும். அந்த அமைப்பின் முக்கியமான தலைவர் அழிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவி்க்கப்பட்டுள்ளது ஒசாமா பின்லேடனுக்கு 5 மனைவிகள். இதன்மூலம் அவருக்கு 23 பிள்ளைகள் உள்ளனர். இதில் 3-வது மனைவியின் மகன்தான் ஹம்சா பின்லேடன். சிறு வயது முதலே தீவிரவாத பயிற்சி பெற்று வந்த அவர், அமெரிக்காவை எச்சரித்து பல்வேறு வீடியோக்களையும் வெளியிட்டார். அவரது மரணம் குறித்து அல்-காய்தா தரப்பில் எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.