எதிர்கட்சிக்கு சென்ற அமெரிக்க பிரதிநிதிகள் சபை; சபாநயாகர் பதவியில் இருந்து நான்சி பெலோசி விலகுகிறார்; இனி இவர
அமெரிக்க செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை யார் கைக்கு செல்லும், யார் கை ஓங்கும் என்று காத்திருந்தது முடிவுக்கு வந்துள்ளது. குடியரசுக் கட்சியினர் அரிதி பெரும்பான்மையுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சபையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கலிபோர்னியாவின் 27வது மாவட்டத்தில் இருந்து கிடைத்த வெற்றி, குடியரசுக் கட்சிக்கு அதிகாரத்தை கொடுத்துள்ளது.
கடந்த வாரம் அமெரிக்காவில் நடந்த இடைக்காலத் தேர்தல் மூலம் ஜனநாயகக் கட்சியினர் செனட் அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டனர். பிரதிநிதிகள் சபை குடியரசுக் கட்சியினர் கைக்கு சென்றுள்ளது. இதன்மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அதிகாரங்களைப் பெறுவதற்கு குடியரசுக் கட்சியினருடன் ஜோ பைடன் மோதல்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்க மக்கள் குடியரசுக் கட்சியை தேர்வு செய்வதற்கு தயாராகிவிட்டனர் என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர் கெவின் மக்கார்தி தெரிவித்துள்ளார்.
சபையின் அடுத்த சபாநாயகராக ஜனநாயகக் கட்சியின் நான்சி பெலோசிக்கு பதிலாக மக்கார்தியை குடியரசுக் கட்சி தேர்வு செய்துள்ளது. இதையடுத்து அமெரிக்கர்களுக்கு சிறந்த பலன்களை வழங்குவதற்கு இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மக்கார்த்திக்கு ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, ''கடந்த வார தேர்தல் அமெரிக்க ஜனநாயகத்தின் வலிமையையும் பின்னடைவையும் வெளிப்படுத்தி உள்ளது. அரசியல் வன்முறைகள் மற்றும் மிரட்டல்களை கடுமையாக மக்கள் நிராகரித்தனர். அமெரிக்காவில், மக்களின் விருப்பமே முக்கியத்துவம் பெறுகிறது. எதிர்காலம் அரசியல் போரில் சிக்குவதற்கு வழி வகுக்கலாம்'' என்று ஜோ பைடன் தெரிவித்து இருந்தார்.
அமெரிக்கா என்றாலும் அதற்கு விதிவிலக்கில்லை. அங்கேயும் ஆட்சி மாறும்போது காட்சிகள் மாறும் என்பதற்கேற்ப தற்போது ஜோ பைடன் குடும்பத்தினர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு குடியரசுக் கட்சியினர் தயாராகி வருகின்றனர். ஜோ பைடனின் மகன் ஹன்டர் சீனாவில் செய்திருக்கும் வர்த்தகம் குறித்து ஆராய தயாராகி வருகின்றனர். இதுபோன்று பைடனின் அதிகாரிகள் குறித்தும் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகிழ்ச்சி - டிரம்ப் என்ன ஆனார் ?
மேலும், பிரதிநிதிகள் சபையின் அதிகார வரம்பிற்குள் போரை அறிவித்தல், நாணயம் தொடர்பான முடிவுகளை அறிவித்தல், ராணுவம் மற்றும் கடற்படையை உருவாக்குதல், வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துதல், குடியேற்ற சட்ட நடைமுறைகளை வரையறுத்தல், கூட்டாட்சி நீதிமன்றங்கள் மற்றும் அவற்றின் அதிகார வரம்புகளை நிறுவுதல், வருவாய் மசோதாக்களை தொடங்குவதற்கான அதிகாரம் வழங்குதல் ஆகியவை வருகின்றன. இவற்றுக்கு இனி எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சிதான் தலைமை வகிக்கும். இவற்றின் ஒப்புதலுடன்தான் இவை நிறைவேற்றப்படும்.