இந்தியா-சீனா எல்லையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தனது படைகளை குவித்து இந்தியாவை, சீனா அச்சுறுத்தி வருகிறது. சீனாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகள் களமிறங்கியுள்ள நிலையில், மூன்று நாடுகளையும் ஒருசேர எதிர்ப்பதற்கான வியூகத்தில் இந்தியா ஈடுபட்டுள்ளது. எல்லை மோதல்களை  மையமாக வைத்து அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பாகிஸ்தானை தன் கைப்பாவைகளாக்கியுள்ள சீனா, இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட மற்ற அண்டை நாடுகளையும் தன் வலையில் வீழ்த்த முயற்சித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடுகளில் ஒன்றாக பூட்டான் இருந்துவருகிறது. ஆனால் அந்த நாடும்  தனது நாட்டின் வழியாக ஓடும் தண்ணீரை தடுத்து வைத்து அசாம் மாநில விவசாயத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறது என குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அது உண்மைக்குப் புறம்பானது என பூட்டான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தியாவிற்கு விளக்கமளித்துள்ளது. 

அதாவது பூட்டானின் வெளியுறவு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து அளித்துள்ள விளக்கம் வருமாறு:- இது ஒரு குழப்பமான குற்றச்சாட்டு, இந்தக் குற்றச்சாட்டில் துளியளவும் உண்மை இல்லை என்பதை வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்த விரும்புகிறது. இந்த கடினமான நேரத்தில் தண்ணீரை  நிறுத்த எந்த காரணமும் இல்லை,  பூட்டான் மற்றும் அசாமிய நண்பர்களிடையே தவறான புரிதலை உருவாக்க இது போன்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன. மேலும் அசாமின் பக்ஷா மற்றும் உதல்கிரி மாவட்ட விவசாயிகள் பல ஆண்டுகளாக பூட்டனின் நீரை பயன்படுத்துகின்றனர். மேலும் நாங்கள் கொரோனா தொற்று நோயை எதிர்கொண்டு கடினமான காலத்தை கடந்து செல்லும் போதும் கூட இந்த ஒத்துழைப்பு தொடர்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக அசாம் விவசாயிகள் பூட்டானுக்குள் நுழைய முடியவில்லை. 

இதனால் பாசனத்திற்கு தண்ணீர்  கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படுகிறது,  இருப்பினும் அசாம் விவசாயிகளின் சிரமங்களைப் புரிந்து கொண்டு அசாம் நோக்கி நீர் பாய்ச்சுவதில் எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில், ஜொங்கர் மாவட்ட அதிகாரிகள் மற்றும் மக்கள், பாசன தடங்களை சீர் செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அசாமின் தலைமைச் செயலாளர் குமார் சஞ்சய் கிருஷ்ணா, பூட்டான் மலைகள் வழியாக அசாமிக்கு நீர் பாய்கிறது ஆனால் வழியில் சில கற்கள் இருந்ததால் அதன் ஓட்டம் நிறுத்தப்பட்டது. நாங்கள் பூட்டானுடன் பேசினோம், உடனடியாக வழியை சுத்தம் செய்தனர். அது குறித்து இதுவரை எந்த புகாரும் இல்லை என்ற அவர், அசாமுக்கு வரும் தண்ணீரை பூட்டான் நிறுத்தியது என்று சொல்வது தவறு எனக் கூறியுள்ளார். அதேநேரத்தில் அசாம் கிராமவாசிகள் பூட்டான் அரசாங்கத்திற்கு எதிராக, நீர்ப்பாசனத்திற்கு இடையூறு  விளைவிப்பதாக கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் இந்த பிரச்சனையை பூட்டான் அரசாங்கத்துடன் விரைவில் பேசி தீர்க்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.