முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ளது. மாணவர்கள் எழுச்சிக்கு எதிரான அடக்குமுறை வழக்கில் சர்வதேச நீதிமன்றம் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமரும், தப்பியோடிய குற்றவாளியுமான ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதியுள்ளது.
மாணவர்களின் எழுச்சிக்கு எதிரான அடக்குமுறை தொடர்பான வழக்கில், சர்வதேச நீதிமன்றம் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறை தொடர்பாக, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT-BD) அளித்த தீர்ப்பை வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வழக்கில், ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸமான் கான் கமல் ஆகியோர் பல பிரிவுகளின் கீழ் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்ததாகத் தீர்ப்பாயம் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.
இவர்கள் தவிர, முன்னாள் காவல்துறை தலைமை ஆய்வாளர் சௌத்ரி அப்துல்லா அல்-மாமுன் என்பவரும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்ததாக குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க இந்தியாவுக்கு அழுத்தம்
இந்தியாவுடனான நாடுகடத்துவதற்கான ஒப்பந்தத்தை (Extradition Agreement) வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. ஷேக் ஹசீனாவைத் திரும்ப ஒப்படைக்க உதவுவது இந்தியாவின் கட்டாயப் பொறுப்பு என்றும் வலியுறுத்தியுள்ளது.
"மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட இந்த நபர்களுக்கு வேறு எந்த நாடும் அடைக்கலம் கொடுப்பது, நட்புக்கு விரோதமான, நீதியை அலட்சியப்படுத்தும் செயலாகும்” என்றும் வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஷேக் ஹசீனாவின் தற்போதைய நிலை
கடந்த ஆண்டு ஜூலையில் மாணவர்கள் நடத்திய பாரிய போராட்டங்கள் வங்கதேசத்தை உலுக்கியது. இதன் விளைவாக, ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் கவிழ்ந்தது, அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அப்போதிருந்து, ஷேக் ஹசீனா இந்தியாவில் அடைக்கல் தேடி, இங்கு வசித்து வருகிறார். அவரது மகன் சஜீப் வாஜித் கூற்றுப்படி, ஹசீனா டெல்லியில் ரகசியமான இடத்தில் வசிக்கிறார். இந்தியா அவருக்கு முழு பாதுகாப்பையும் வழங்கி வருகிறது.
கடந்த ஆண்டு, மாணவர்களின் எழுச்சியை ஒடுக்க உத்தரவிட்டாரா என்பது தொடர்பான வழக்கில் விசாரணை செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து நாடுதிரும்புமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஷேக் ஹசீனா புறக்கணித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
