பெண் நிருபர் சரமாரியாக குத்திக் கொலை !! கணவர் செய்த வெறிச்செயல் !!
வங்க தேசத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றிய பெண் நிருபர் ஒருவரை மர்ம நபர்கள் சரமாரியாக குத்திக் கொலை செய்தனர். அவரது கணவர்தான் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
வங்காளதேசத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியான ஆனந்தா டி.வி.சேனலில் நிருபராக பணியாற்றி வந்தவர் சுபர்னா அக்டெர் நோடி. ஜக்ரோட்டோ பங்லா என்னும் நாளிழிதள் ஒன்றிலும் சுபர்னா நிருபராக இருந்தார்.
சுபர்னாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
கணவரைப் பிரிந்த சுபர்னா, தனது 9 வயது மகளுடன் பாப்னா மாவட்டத்தில் உள்ள ராதாநகர் பகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு சுமார் 11 மணியளவில் வீட்டின் காலிங் பெல் அழைப்பு சத்தத்தைக் கேட்டு கதவை திறக்க வந்த சுபர்னாவை சுமார் பத்து பேர் கொண்ட கும்பல் கூரிய ஆயுதங்கள் சரமாரியாக குத்தியது.
சுபர்னாவின் கூச்சல் கேட்டு ஓடிவந்த அருகாமை வீட்டினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த சுபர்னாவை அங்கிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சுபர்னா மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட கும்பலில் அவரது முன்னாள் கணவரும் இருந்ததாக கூறப்படும் நிலையில் இச்சம்பவம் தொடர்பாக ராதாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கொலையாளிகளைப் பிடிக்ககாவல்துறை தரப்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நோடியின் மரணத்துக்குப் பத்திரிகையாளர்கள் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.