பிரிஸ்பேன் நகரில் கடந்த வாரம் இந்திய டிரைவர் மன்மீத் அலிசரை உயிரோடு எரித்துக்கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர் மனநோயாளியாக இருந்து சிகிச்சை எடுத்துக்கொண்டவர் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. 

எரித்துக் கொலை

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் அரசு பஸ்சில் டிரைவராக இருந்தவர் பஞ்சாப்பை சேர்ந்த மன்மீத் அலிஷர். கடந்தவாரம் பஸ்ஸில் இருந்த பயணி ஒருவர், தீப்பற்றி எரியும் ரசாயன திரவத்தை மனமீத் மீது ஊற்றி எரித்துக் கொன்றார். 

கைது

இது குறித்து பிரிஸ்பேன் போலீஸ் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அந்தோனி மார் எட்வார்ட் ஓ டுனோக் என்பவரைக் கைது செய்தனர். இவரிடம் விசாரணை நடத்தியதில் இவர் மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தவர் என்பது தெரியவந்தது. தற்போதும் இவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மோடி வருத்தம்

இதற்கிடையே ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, மன்மீத் சிங் கொல்லப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அப்போது பிரதமர் மோடியிடம், இந்த கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும் என பிரதமர் டர்ன்புல் உறுதியளித்துள்ளார். 

இந்நிலையில், ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை அமைச்சர் கேமரூன் டிக் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தனி விசாரணை

மன்மீத்தை கொலை செய்த அந்தோனி மார்க் எட்வார்ட் ஓ டுனோக் இதற்கு முன் மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தவர். தற்போதும், அவருக்கு குயின்ஸ்லாந்து மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது தொடர்பாக அந்தோனியிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தப்படும். இதற்காக உளவியல் நிபுனர் பால் முலன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 8 வாரங்களில் அறிக்கை அளிப்பார்கள். இந்த விசாரணையில் அளிக்கப்படும் பரிந்துரைகள், கண்டுபிடிப்புகள் எதுவாக இருந்தாலும் அது வெளிப்படையாக அறிவிக்கப்படும். 

குயின்ஸ்லாந்து போலீசாருக்கு தேவையான உதவிகளை சுகாதாரத்துறை அமைச்சகம் அளிக்கும். மேலும், குயின்ஸ்லாந்து சுகாராத்துறை ஆணையரும் அந்தோனி உடல்நிலை தொடர்பாக தனிப்பட்ட விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

பிரிஸ்பேன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட அந்தோனி, நீதிபதி காவலில் வைக்கவும், வழக்கை அடுத்த மாதத்துக்கும் ஒத்திவைத்தார்.

தாய்-தந்தைக்கு தெரியாத இறப்புச்செய்தி...

பஞ்சாப் டிரைவர் மன்பீத் அலிஷர் இறப்புச் செய்தி கேட்டு அவரின் சகோதரர் அமீத் அலிஷர் நேற்றுதான் பிரிஸ்பேன் நகருக்கு வந்துள்ளார். இது குறித்து மன்பீத் அலிஷரின் குடும்ப நண்பர் வின்னர்ஜித் கோல்டி கூறுகையில், “ மன்பீத் இறப்பு குறித்து இன்னும் அவரின் தாய்,தந்தைக்கு தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. அவருக்கு விபத்து நடந்து, கோமாவில் இருக்கிறார் என மட்டும் சொல்லி இருக்கிறோம்.

இது உண்மையில் எங்களுக்கு கஷ்டமான நேரம். ஆஸ்திரேலிய வரலாற்றிலும் இது மோசமான நாளாகும். நீதிக்கு மதிப்பு கொடுக்கும் ஆஸ்திரேலியாவில் நிச்சயம் எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம். மன்பீத் வருமானத்தை நம்பியே அவரின் குடும்பம் இருக்கிறது''எனத் தெரிவித்தார்.