பாரீசில் ஒலிம்பிக் தொடக்கம்; பிரான்ஸில் தாக்குதல்! அதிவேக ரயில் சேவைகள் கடும் பாதிப்பு!!
Olympic Games Paris 2024: பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக இன்று தொடங்க உள்ள நிலையில், பிரான்சின் அதிவேக ரயில் நிலையங்களை குறிவைத்து ஆங்காங்கே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏராளமான மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடப்பாண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. தொடக்க விழாவிற்கு சில மணி நேரங்கள் முன்னதாக பிரான்ஸின் அதிவேக ரயில் நிலையங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தீ வைப்பு தாக்குதலில் சில ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் சிக்னல்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால், அதிவேக ரயில் வலையமைப்பு சீர்குலைத்துள்ளன. இதனால், இயக்கத்திலிருந்து ரயில்கள் அனைத்தும் அதிக தாமதங்களை எதிர்கொண்டது. பயிணிகள் ரயிலின் உள்ளேயும், ரயில் நிலையங்களின் வெளியேயும் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இது அதிவேக ரயில் வலையமைப்பு TGV நெட்வொர்க்கை முடக்குவதற்கான பெரிய அளவிலான தாக்குதல் என SNCF தெரிவித்துள்ளது. மேலும், பல வழித்தடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இவற்றை சரிசெய்ய குறைந்தது வார இறுதி நாட்கள் முழுவதும் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் பல இடங்களில் நடப்பட்ட இந்த தாக்குதலால் பாதி ரயில் சேவை கடுமையாக பாதிக்கபட்டுள்ளதாக ரயில் ஆப்பரேட்டர் கூறியுள்ளார். ரயில்களை மாற்றுப் பாதைகளுக்கு திருப்பி விடப்பட்டாலும், கணிசமான எண்ணிக்கையில் ரயில் சேவைகள் ரத்து செய்ய வேண்டியிருக்கும் என்று பிரான்ஸ் அதிவேக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் சிரமத்தை தவிர்க்க, ரயில் பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையில் பிரான்ஸ் போக்குவரத்து அமைச்சர் Patrice Vergriete இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் தொடக்க விழாவையும், வார இறுதி நாட்களையும் குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். போக்குவரத்து நிலைமையை விரைவில் மீட்டெடுக்க மீட்பு குழுவினர் பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.
மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பாரிஸில் உள்ள Montparnasse நிலையத்தில், பயணிகள் கடுமையான தாமதங்கள் எதிர்கொண்டனர். வடக்கில், அராஸ் அருகே ஏற்பட்ட தீ விபத்தால், அதிகாலை 5:15 மணி முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது, ஒன்றரை மணி நேரம் தாமதமாக வரும் என எதிர்பார்க்கப்பட்ட ரயில்கள் மேலும் தாமதமாகின.