சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசம்! விஞ்ஞானிகளை அசர வைத்த கண்டுபிடிப்பு!!
பிரபஞ்சத்தில் இதுவரை காணப்படாத பிரகாசமான பொருளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமாக இருக்கலாம் என்று கணித்துள்ளனர்.
பிரபஞ்சத்தில் இதுவரை காணப்படாத பிரகாசமான கருந்துளையை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் (ESO) VLT எனப்படும் மிகப் பெரிய தொலைநோக்கியைப் பயன்படுத்தி இதனைக் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை கண்டிராத அளவுக்கு மிகவும் பிரகாசமாக உள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இத்தகைய ஒளிரும் கருந்துளையை குவாசர் என்று அழைக்கிறார்கள். இவை விண்மீன் திரள்களின் மிகவும் பிரகாசமான மையங்கள் ஆகும். மையத்தில் உள்ள மிகப்பெரிய கருந்துளைகளால் அவை இயக்கப்படுகின்றன. இந்த கருந்துளைகளில் வாயு மற்றும் தூசி விழுவதால், அவை மின்காந்த கதிர்வீச்சை வெளியிடுகின்றன. தீவிரமான ஒளியை உமிழ்கின்றன என்றும் விளக்குகிறார்கள்.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குவாசரின் பிரகாசம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக இருப்பதுடன், வேகமாக வளர்ந்தும் வருகிறது. இது விண்மீன் மண்டலத்தில் உள்ள பிரகாசமான குவாசர்களின் சிறப்பியல்பு என்று சொல்கிறார்கள். J0529-4351 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குவாசரின் பிரகாசம் தினமும் ஒரு சூரியனுக்கு சமமான அளவு வளர்ந்து வருவதாகவும், இப்போதே சூரியனை விட 500 டிரில்லியன் மடங்கு பிரகாசமாக இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள்.
கூகுளில் கேட்கக்கூடாத கேள்விகள்: இதை எல்லாம் தேடினால் பதில் வராது! வீடு தேடி போலீஸ் தான் வரும்!
இது குறித்த ஆய்வு Nature Astronomy என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குவாசர் வெளியிடும் ஒளி அசாதாரணமானது என்றும் வேகமான வளர்ச்சி, தீவிர வெப்பநிலை, பெரிய அண்ட மின்னல்கள் ஆகியவற்றின் காரணமாக இது பிரபஞ்சத்தின் நரகம் போன்ற பகுதி என்றும் ஆய்வு குறிப்பிடுகிறது.
"இன்று வரை அறியப்பட்ட மிக வேகமாக வளர்ந்து வரும் கருந்துளையை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இது 17 பில்லியன் சூரியன்களுக்குச் சமமானது. ஒரு நாளைக்கு ஒரு சூரியன் அளவுக்கு வளர்கிறது. இது பிரபஞ்சத்தில் இதுவரை அறியப்பட்டதிலேயே மிகவும் ஒளிரும் பொருளாக உள்ளது" என்று ஆய்வாளர் கிறிஸ்டியன் வுல்ஃப் சொல்கிறார். இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரான இவர் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார்.
இந்த குவாசர் பூமியில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால், அதன் ஒளி நம்மை வந்தடைய 12 பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொண்டதாக வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர். பூமியில் இருந்து பார்ப்பதற்கு குவாசர்கள் நட்சத்திரங்களைப் போலவே தோன்றும்.
இந்த குவாசர் 1980ஆம் ஆண்டு முதல் காணப்பட்டாலும், வானியலாளர்கள் இதை சமீபத்தில்தான் அங்கீகரித்துள்ளனர். ஆரம்பத்தில், இந்த அளவுக்குப் பிரகாசமான ஒரு குவாசர் இருக்குமா என்ற விவாதம் நிலவியது. பின்னர், ஆஸ்திரேலியாவில் உள்ள சைடிங் ஸ்பிரிங் ஆய்வகத்தில் உள்ள 2.3 மீட்டர் தொலைநோக்கியைப் பயன்படுத்தி, அது ஒரு குவாசர் தான் என்பதை உறுதிப்படுத்தினர்.
பிறகு ஐரோப்பியத் தெற்கு ஆய்வகத்தின் VLT தொலைநோக்கி உதவியுடன், இது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகவும் பிரகாசமான குவாசர் என்பதைக் கண்டுபிடித்தனர். இந்த தொலைநோக்கி கருந்துளைகளின் அளவை, அதிக தொலைவில் இருந்தாலும் அளவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குவாசர்கள் மற்றும் கருந்துளைகளைப் பற்றி அறிந்துகொள்வது ஆரம்பகாலப் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் அவை எவ்வாறு உருவாகின என்று அறிவதன் மூலம் விண்மீன் திரள்கள் எவ்வாறு உருவாகின என்பதைப் பற்றியும் அறியமுடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
மர்மங்களைச் சுமந்து நிற்கும் அல் நஸ்லா பாறை! பூமிக்கு வந்த ஏலியன்கள் செய்த வேலையா?