ரஷ்யாவின் போர் அறிவற்றது... போரைக் கைவிட வேண்டும்... நடிகர் அர்னால்ட் வலியுறுத்தல்!!
ரஷ்யாவின் அறிவற்ற போரை நிறுத்த வேண்டும் என ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவின் அறிவற்ற போரை நிறுத்த வேண்டும் என ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் ரஷ்யா ராணுவம் கொடூரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்செநேகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த போர் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் ரஷ்ய மக்களை நேசிக்கிறேன். அதனால் நான் உங்களிடம் உண்மையைப் பேச வேண்டும். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த அறிவற்ற போரைக் கைவிட வேண்டும். ரஷ்ய அரசு தனது மக்களிடம் மட்டுமின்றி, தனது ராணுவத்தினரிடமும் பொய் கூறியுள்ளது. தான் கைது செய்யப்படுவோம் என்ற போதும், தனது அரசுக்கு எதிராக போர் நிறுத்தம் கோரி போராடும் ரஷ்ய மக்களுக்கு பாராட்டுக்கள்.
அவர்கள் புதிய ஹீரோக்கள். ரஷ்ய அதிபர் புடினை சுட்டிக்காட்டி, இந்தப் போரைத் தொடங்கியதும் நீங்கள் தான். நடத்திக் கொண்டிருப்பதும் நீங்கள் தான். உங்களால் இந்தப் போரை நிறுத்த முடியும். உலகில் நடைபெறும் பல்வேறு விவகாரங்கள் உங்களிடம் மறைக்கப்படுவதாலும், அந்தக் கொடூரங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதாலும் நான் இதனைப் பேசுகிறேன். உக்ரைன் இந்தப் போரைத் தொடங்கவில்லை. கட்டிடங்களின் குவியல்களில் இருந்து குழந்தைகள் மீட்கப்படுவதைப் பார்க்கும் போது, நான் இரண்டாம் உலகப் போரின் துயரங்களைப் பார்ப்பது போல உணர்ந்தேன். தொடர்ந்து ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை என அரசு மக்களிடம் கூறியவை பொய்.
ரஷ்ய மக்களின் அன்பும், பலமும் எனக்கு எப்போதும் ஊக்கம் தந்துள்ளன. அதனால் நான் உக்ரைன் பற்றிய போரின் உண்மைகளை உங்களிடம் கூற விரும்புகிறேன். உக்ரைன் நாட்டில் நாஜிக்களை அழிப்பதற்காக போர் தொடுத்திருப்பதாக உங்கள் அரசு உங்களிடம் கூறியிருப்பது பொய். இந்தப் போரை ரஷ்ய அரசு தான் தொடங்கியுள்ளது. இந்த வீடியோவைப் பார்க்கும் ரஷ்யப் படையினர் என் தந்தை போல உடைந்து போகக் கூடாது. இந்தப் போர் என்பது உங்கள் மூதாதயரின் தாய்நாடான ரஷ்யாவைப் பாதுகாப்பதற்காக நடைபெறவில்லை. இது சட்டவிரோதமான போர். உலகமே எதிர்க்கும் இந்த அறிவற்ற போருக்காக உங்கள் உயிர்களும், எதிர்காலமும் வீணாகத் தியாகம் செய்யப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.