தவறுகளை திருத்துவதற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளேன்; மூன்றாம் மன்னர் சார்லசை சந்தித்த பின்னர் ரிஷி சுனக் பேட்டி!
பிரிட்டன் நாட்டின் பிரதமராக ரிஷி சுனக்கை அந்த நாட்டின் மூன்றாம் மன்னர் சார்லஸ் நியமனம் செய்துள்ளார்.
இந்த அதிகாரபூர்வ சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''தவறுகளை சரி செய்வதற்காக நான் பிரதமர் பொறுப்பில் நியமிக்கப்பட்டு இருக்கிறேன். நான் நம் நாட்டை வார்த்தைகளால் அல்ல செயலால் ஒன்றிணைப்பேன். திறன் மேம்பாட்டை அடைய, நாள் தோறும் கடுமையாக உழைப்பேன். நம்பிக்கையை சம்பாதிக்க வேண்டும்... நான் அதை செய்வேன். இந்த நியமனம் நம் அனைவருக்கும் சொந்தமான மற்றும் ஒன்றிணைக்கும் செயலாகும். நமது தேர்தல் அறிக்கை மிகவும் முக்கியமானது'' என்று ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
மேலும், ''தற்போது நமது நாடு ஒரு ஆழமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. உக்ரைனில் நடந்த புடின் போர் உலக சந்தைகளை சீர்குலைத்துள்ளது. முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் இந்த நாட்டின் பொருளாதார இலக்குகளுக்காக பாடுபட்டதில் தவறு எதுவும் இல்லை. நான் அவரைப் பாராட்டுகிறேன். ஆனால் சில தவறுகள் நடந்தன. தவறான எண்ணத்தில் அந்த தவறுகளை அவர் செய்யவில்லை'' என்றார்.
பிரிட்டனின் இந்திய வம்சாவளி அரசியல் தலைவராக உருவெடுத்து, கடந்த 200 ஆண்டுகளில் இங்கிலாந்தின் உயர் பதவியை வகிக்கும் முதல் இந்து என்பதுடன் இளையவர் என்ற பெருமையை பெறுகிறார் ரிஷி சுனக். லிஸ் ட்ரஸ் பிரதமராக 49 நாட்களே பதவியில் நீடித்தார். இந்த நிலையில் நடப்பாண்டில் பிரிட்டனின் மூன்றாவது பிரதமராக ரிஷிசுனக் பதவியேற்க இருக்கிறார்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவராக ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவரது போட்டியாளரான பென்னி மோர்டன்ட் போட்டியில் இருந்து விலகினார். 357 கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் ஆதரவைப் பெற்ற ரிஷி சுனக் தற்போது பிரதமராகிறார்.
ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்து இருக்கும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பிரிட்டன் நாட்டுடனான உறவை வலுப்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Rishi Sunak Challenges:பிரிட்டனைக் காப்பாற்றுவாரா? ரிஷி சுனக்கிற்கு காத்திருக்கும் 9 சவால்கள் என்ன?