உங்க இதயத் துடிப்பு உங்களுக்கே கேட்கும்.. கண்முன்னே அமானுஷ்யம் நடக்கும் - உலகின் Silent Room பற்றி தெரியுமா?
World's Most Silent Room : அறிவியலின் அதிசயத்தில் உலக அளவில் பல வினோதமான இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் இந்த Silent Room. இதுகுறித்து இந்த பதிவில் காணலாம்.
"கொஞ்ச நேரம் அமைதியாக இருங்க ப்ளீஸ்" என்று அந்த வார்த்தையை கூறாத மனிதனே இருக்க முடியாது என்கின்ற அளவிற்கு, ஏதோ ஒரு கட்டத்தில், மனிதன் தன்னை சுற்றி சில மணி நேரமாவது அமைதியான சூழல் நிலவ வேண்டும் என்று கருதுவது இயல்பு தான். ஆனால் உண்மையில் அதீத நிசப்தம் ஏற்பட்டால் எப்படி இருக்கும்?.
உலகில் அப்படி ஒரு இடம் உள்ளதா? இருக்கின்றது, அதீத நிசப்தம் எப்படி இருக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கும் ஒரு இடம் தான் "Anechoic Chamber". கடந்த 2015ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில், உலகின் மிகவும் நிசப்தமான இடமாக இந்த இடம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள பிரபல "மைக்ரோசாப்ட்" நிறுவனத்தின் அலுவலகத்தின் மத்தியில் அமைந்திருப்பது தான் இந்த அறிவியலால் சூழப்பட்ட ஒரு அறை.
பொதுவாக ஒரு மனிதனின் காதுகள் சராசரியாக 0 முதல் 130 டெசிபல் வரை உணரும் திறன் கொண்டது. மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி 70 டெசிபல் என்ற அளவிற்கு மேல் சத்தத்தை கேட்காமல் இருப்பது மிகவும் நல்லது என்று கூறுகின்றனர். ஒரு காய்ந்த இலை கீழே விழும்போது 12 டெசிபலுக்கும் சற்று அதிகமான அளவில் சத்தத்தை ஏற்படுத்துமாம், நாம் மூச்சு விடும்போது கூட 10 டெசிபல் என்ற அளவில் சத்தம் ஏற்படுத்தப்படுகிறது.
ஆனால் மைக்ரோசாப்ட் அலுவலகத்தில் உள்ள அந்த அறையில் எவ்வளவு டெசிபல் சத்தம் இருக்கும் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படாமல் இருக்க மாட்டீர்கள். அந்த அறையின் உள்ளே -20.35 டெசிபல் சத்தம் நிலவும் என்று அந்த அறையை கட்டிய அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அப்படி என்றால் நாம் மூச்சு விடுவது கூட நல்ல சத்தத்துடன் நமக்கு கேட்கும்.
அப்போ இந்த அறைக்குள் செல்லவே முடியாதா? என்று கேட்டால், நிச்சயம் முடியும். இன்னும் சொல்லப்போனால் இது ஒரு சுற்றுலா தளமாகத் தான் தற்பொழுது வரை திகழ்ந்து வருகிறது. ஒரு ஐந்து நிமிடம் இந்த அறைக்குள் நீங்கள் இருந்தால் நீங்கள் மூச்சு விடுவது உங்களுக்கு பலமாக கேட்கும், உங்களுடைய இதயத்துடிப்பு உங்களுக்கு மிகவும் தெளிவாக கேட்கும். நீங்கள் கை, கால்களை அசைக்கும் போது உங்களுடைய எலும்புகளுக்கு இடையே ஏற்படும் உராய்வின் சத்தத்தை கூட உங்களால் கேட்க முடியும்.
இது மட்டுமல்ல உங்கள் நரம்புகளில் ரத்தம் ஓடுகின்ற சத்தத்தை கூட கேட்க முடியும் என்கிறார்கள். அண்மையில் ஒரு நபர் இந்த அறைக்குள் சுமார் ஒரு மணி நேரம் தனது நேரத்தை செலவிட்ட நிலையில், Hallucination எனப்படும் ஒரு வகை மன நிலைக்கு சென்று, பல அமானுஷ்யம் நிறைந்த உருவங்கள் அவருக்கு அருகே செல்வதை போல உணர்ந்து அந்த அறையை விட்டு வெளியே ஓடியுள்ளார்.
அதீத நிசப்தத்தில் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் அப்படி நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த அறை பொதுவாக அறிவியல் மற்றும் மின்னணு சார்ந்த பல்வேறு பொருட்களிலிருந்து வரும் சத்தம் மற்றும் ஒலிகளை சோதிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் பூமிக்குத் திரும்பி வந்த பிஎஸ்எல்வி போயம்-3! இன்னொரு மைல்கல்லை எட்டிய இஸ்ரோ!