ட்ரம்புக்கு எதிராக களமிறங்கிய அவரின் இளையமகள்..!! போராட்டக்காரர்களுடன் கை கோர்த்த டிஃப்பனி ட்ரம்ப்..!!
போலீசாரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்னபொலிஸ் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளன, அதில் மினசோட்டா, ஜார்ஜியா,ஓகியோ கென்டக்கி, டெக்ஸாஸ், கொலம்பியா ஆகிய மாகாணங்களில் கலவரம் காட்டுத்தீயாக பரவி உள்ளது.
ஆப்பிரிக்க அமெரிக்க கருப்பின குடிமகன் ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நியாயம் கேட்டு அமெரிக்காவில் நடந்துவரும் போராட்டத்திற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இளைய மகள் டிஃப்பனி ட்ரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சட்டம் பயின்று வரும் டிஃப்பனி, அதிபர் ட்ரம்பின் இரண்டாவது மனைவி மார்லா மேப்பிள்ஸின் மகள் ஆவார். ஜார்ஜியின் மரணம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள டிஃப்பனி, #blackoutT Tuesday #justiceforgeorgefloyd என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், " நாம் தனியாக இருந்தால் மிகக் குறைவாகவே சாதிக்க முடியும் நாம் ஒன்றாக இருந்தால் நிறைய சாதிக்க முடியும்" என கூறியுள்ளார். வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு வெளியே போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் டிஃப்பனி ட்ரம்ப் இவ்வாறு கருத்து பதிவிட்டுள்ளார்.
அவரின் கருத்து அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, டிஃப்பனி இவ்வாறு பதிவிட்டுள்ள நிலையில் பலர் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து கூறி வருகின்றனர். சமூகவலைதளத்தில் காட்டும் இந்த எதிர்ப்பை உங்களது தந்தையிடம் நீங்கள் விளக்க வேண்டும் என்று பலர் டிஃப்பனியிடன் கோரி வருகின்றனர். பலர் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர், அதேநேரத்தில் டிஃப்பனி ஆதரவாக அவரது தாயார் மார்லா மோப்பிள்ஸ் போராட்டக்காரர்களை ஆதரித்து கருத்து பதிவிட்டுள்ளார். அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கடந்த 25ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர் சந்தேகத்தின் பேரில் போலீஸாரால் விசாரிக்கப்பட்டார், அப்போது விசாரணை அதிகாரி அந்த இளைஞரை கீழே தள்ளி முழங்காலால் கழுத்தை மிதித்தார், தனக்கு மூச்சு திணறுகிறது தன்னை விடுவிக்கும்படி சுமார் பத்து நிமிடங்களுக்கும் மேலாக பிளேடு போராடியும் அந்த அதிகாரி அவரை விடவில்லை, இதனால் பிளேடு மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போலீசாரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்னபொலிஸ் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளன, அதில் மினசோட்டா, ஜார்ஜியா,ஓகியோ கென்டக்கி, டெக்ஸாஸ், கொலம்பியா ஆகிய மாகாணங்களில் கலவரம் காட்டுத்தீயாக பரவி உள்ளது. இந்நிலையில் பிளாய்டை கொன்ற போலீஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்நிலையில் மின்னபொலிஸ் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது நிறவெறியினால் நடத்தப்பட்ட படுகொலை எனக்கூறி ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உணவகங்கள், வங்கிகள் வணிக வளாகங்கள் போராட்டக்காரர்களால் சூரையாடப்பட்டுவருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிடும் ட்விட்டர்கள் போராட்டத்தை மேலும் கோபப்படுத்துவதாக மாறியுள்ளது, அவசியமில்லாமல் போராடும் இந்த குண்டர்கள் ஜார்ஜ் பிளாய்டுக்கு அவமதிப்பை ஏற்படுத்துகிறார்கள் என்றும் அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடப்படும் என்றும் போராட்டக்காரர்களை மிரட்டிவருவது போராட்டத்தை இன்னும் வேகமெடுக்க வைத்துள்ளது.