சீனா கொரோனா வைரஸ் மூலம் அமெரிக்காவிற்கும் உலகின் பிற பகுதிகளுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவை மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ்  உலகம் முழுவதும் பரவி பேரச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில் ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.  கடந்தாண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வுபே மாகாணம், வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 189  க்கும் அதிகமான நாடுகளில் பரவி மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியவில்லை.  இந்நிலையில் உலகம் முழுவதும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சத்து 49 ஆயிரத்து 995 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் இந்த வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 36 ஆயிரத்தை கடந்துள்ளது. 

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 44 லட்சத்து 82 ஆயிரத்து 768 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இந்த வைரஸிலிருந்து சுமார் 65 இலட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சைபெற்று குணமடைந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, மெக்சிகோ, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரையிலும் இந்த வைரசை தடுக்கவும், அதற்கு மருந்து கண்டுபிடிக்கவும் விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ஒரு பிரத்யேக தடுப்பூசி உருவாக இன்னும் சில காலம் ஆகும் என்பதால், இந்த வைரஸ் கட்டுப்பாடின்றி பரவி வருகிறது. இந்நிலையில் இது குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனா, கொரோனா வைரஸ் மூலம் அமெரிக்காவிற்கும் உலகின் பிற பகுதிகளுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் சமீபத்திய காலங்களில் சீனாவின் அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் சீனாவை வெளிப்படையாக விமர்சித்தும், கண்டித்தும் வருகின்றனர். குறிப்பாக  ஹாங்காங் மீது திணிக்கப்பட்ட சட்டத்தை வெளிப்படையாக கண்டித்து வருகின்றனர். 

கொரோனா வைரஸ் விஷயத்தில்  ரகசியம், மோசடி மற்றும் மூடிமறைப்புக்கு சீனா முழு பொறுப்பேற்க வேண்டும்.  சீனாவின் மூடிமறைப்பு மோசடியால்தான் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சுமார் 189  நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியதற்கு சீனாவே முழு பொறுப்பேற்க வேண்டும், இந்த தொற்று நோய் பரவ பெய்ஜிங் காரணமாக இருந்துள்ளது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த காலங்களில் சீனா கொரோனா வைரஸ் தொற்று நோயினை கையாண்ட விதம் குறித்தும் தனது அதிருப்தியை டரம்ப் வெளிப்படுத்தி உள்ளார். பெய்ஜிங்கின் திறமை இன்மையே உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்  பரவக் காரணமாக இருந்ததுடன்,  உலக அளவில் வெகுஜன படுகொலைக்கு வழிவகுத்தது எனவும் அவர் ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் சீனா கொரோனா வைரசை மூடி மறைத்தது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கொரோனா வுஹானில் உள்ள ஒரு வைராலஜி ஆய்வகத்தில் இருந்து  உருவானது என்று வலியுறுத்துவதன் மூலம் மக்களின் கவனத்தை அமெரிக்கா திசை திருப்புவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். கோவிட்-19 குறித்து உலக சுகாதார அமைப்புக்கு புகார் அளித்த முதல் நாடு சீனா, அதனாலேயே அது வுஹானில் இருந்து தோன்றிய வைரஸ் என்று அர்த்தமல்ல எனவும் அவர் மறுத்துள்ளது குறிப்பிடதக்கது...