எபோலா மற்றும் எச்ஐவி உள்ளிட்ட பிற நோய்களுடன் கொரோனாவை ஒப்பிடும்போது இது மிகவும் வித்தியாசமானது என்றும், கடந்த நான்கு மாத காலப்பகுதியில் உலகையே பேரழிவுக்கு உட்படுத்திய இந்த நோய்  ஒரு மோசமான கனவு என  தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் (என்ஐஐஐடி) தலைவரும், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உருவாக்கிய கொரோனா வைரஸ் பணிக்குழுவின் உறுப்பினருமான அந்தோனி பாசி கூறியுள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் வூபே மாகாணம் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதுவரை உலக அளவில்  73 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4 லடசத்து 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 20 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்த வைரசை கட்டுப்படுத்த எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் இந்த வைரஸ் கட்டுக்கடங்காமல் கொத்து கொத்தாக மக்களை தாக்கி வருகிறது. ஒரு தடுப்பூசி வந்தால் மட்டுமே இந்த வைரஸை கட்டுபடுத்த முடியும் என மருந்துவர்கள் கூறி வரும் நிலையில், உலகமே தடுப்பூசியை எதிர் நோக்கி காத்திருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குனரும், வெள்ளை மாளிகையின் ஆலோசகருமான அந்தோனி பாசி, இந்த வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது, இந்த நோய்த்தொற்றின் நீண்ட கால எதிர்மறை விளைவுகளை உலகம் அறிய இன்னும் கால அவகாசம் பிடிக்கும், வரலாற்றில் இதுபோன்ற ஒரு  சூழ்நிலையை நாம் சந்தித்ததில்லை, பூமி என்ற கிரகத்தையே இது முடக்கியுள்ளது, மற்ற கிருமிகளுடன் இதை ஒப்பிடும்போது கொரோனா வைரஸ் என்பது ஒரு மோசமான கனவு என அவர் கூறினார். 

மேலும் தெரிவித்த அவர் உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸ்  தோற்று இன்னும் முடியவில்லை, நாம் சந்தித்த நோய்களிலேயே இது மிகவும் மோசமானது, ஒரு விலங்கிடம் இருந்து வந்து மிக அதிக அளவில் பரவும் தன்மை கொண்டு இருந்தது இந்த வைரஸ் ஆகத்தான் இருக்கும். இந்த வைரஸின் எதிர்மறை விளைவுகளை பற்றி உலகம் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும், கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன, அனைத்து நாடுகளும் பணி நிறுத்தம், ஊரடங்கு என கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மில்லியன் கணக்கான நோய்த்தொற்றுகள் உலக அளவில் ஏற்பட்டுள்ளன, மிகக் குறுகிய காலத்தில் மிக வேகமாக இந்த வைரஸ் பரவி இருக்கிறது. அதன் வேகத்தை எண்ணி ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை, மொத்தத்தில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் சோதனையில் மிக நெருக்கத்தில் இருக்கிறோம் என்று தாம் நம்புவதாக அந்தோணி பாசி கூறினார்.