#UnmaskingChina: எல்லையில் சீனாவின் கொடூரத்தை அம்பலப்படுத்திய அமெரிக்க உளவுத்துறை..!
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடான இந்தியா போன்ற நாடுகளுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் எனவும் அந்நாடுகள் சீனாவை பலவீனமாக கருதிவிடக் கூடாது எனவும் கூறி, தாக்குதலுக்கு உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு லடாக் பகுதியில் கல்வான் நதி பள்ளத்தாக்கில் இந்திய துருப்புகள் மீது தாக்குதல் நடத்த சீனா உத்தரவிட்டது என அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஒரு மூத்த சீன ஜெனரல் இந்திய துருப்புகளை தாக்க தன் படைகளுக்கு உத்தரவு வழங்கினார் எனவும், அதன் விளைவாகவே நூற்றுக்கணக்கான சீன ராணுவத்தினர் இந்திய படையினர் மீது மிருகத்தனமாக தாக்குதல் நடத்தினர் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவமே இரு அணுஆயுத நாடுகளுக்கிடையே பதற்றத்தை அதிகரித்தது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திங்கட்கிழமை (ஜூன்-15) இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் எல்லையில் சீனர்களுடன் போராடி இத்தனை எண்ணிக்கையில் இந்திய ராணுவவீரர்கள் வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதேபோல் சீன தரப்பிலும் சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்தது. உயிரிழப்புகள் ஏற்பட்டதை ஒப்புக்கொண்ட சீனா, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை கூற மறுத்துள்ளது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையே பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது, இந்நிலையில் இந்திய -சீன மோதல் குறித்து அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிட்டுள்ளது, அதாவது, சீனா மேற்கு பிராந்திய கமாண்டிங் அதிகாரி ஜெனரல் ஜாவோ சோங்கி வடக்கு இந்திய மற்றும் தென்மேற்கு சீனாவின் எல்லைப்பகுதியில் இந்திய படைகள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாக அந்த தகவல் தெரிவிக்கிறது. எல்லையில் இந்தியாவுடனான முரண்பாடுகளை மேற்பார்வையிட ஜாவோ, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடான இந்தியா போன்ற நாடுகளுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் எனவும் அந்நாடுகள் சீனாவை பலவீனமாக கருதிவிடக் கூடாது எனவும் கூறி, தாக்குதலுக்கு உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் எல்லையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 20 இந்திய வீரர்களும் 35 சீன ராணுவத்தினரும் உயிரிழந்தனர். இரண்டு பக்கத்திலும் ராணுவ வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர், பின்னர் பேச்சு வார்த்தையில் மூலமாக அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது இருநாட்டுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை என்பதைவிட கட்டுப்பாடுகளை மீறிய நிலையே எனவும், இந்தியாவுக்கு பெய்ஜிங் வலுவான எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடைபெற்றது எனவும் அந்த தகவல் தெரிவிக்கின்றன. மேலும் இது இந்தியாவின் சீற்றத்தை தூண்டியதால் சீனா அதன் அடுத்தடுத்த திட்டத்திலிருந்து பின் வாங்கியதாகவும் மேலும் பேச்சுவார்த்தைகளின்போது இந்தியாவை பணிய வைக்க முடியும் என்பதாலும் இந்த முயற்சியில் சீனா இறங்கியது எனவும் அமெரிக்க உளவுத்துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.