24 மணி நேரத்தில் 4 ஆயிரம் பலி..! வல்லரசு அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் கொரோனா..!
உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக வல்லரசு அமெரிக்கா விளங்கிக் கொண்டிருக்கிறது. அங்கு அசுர வேகம் எடுத்திருக்கும் கொடிய கொரோனா வைரஸ் இதுவரையில் 6,77,570 மக்களை தாக்கியுள்ளது.
ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சீனாவின் வுகானில் கடந்த டிசம்பர் மாதத்தில் உருவாகிய கொரோனா வைரஸ் நோய் அங்கு 3300 உயிர்களை பறித்தது. சீன அரசின் கடுமையான நடவடிக்கைகளால் தற்போது அங்கு கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்து நாட்டின் நிலைமை மெல்ல மெல்ல சீராகி வருகிறது. எனினும் உலகின் பிற நாடுகளில் கொரோனா வைரஸ் தற்போது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ,ஈரான், இங்கிலாந்து, இந்தியா என உலகின் 210 நாடுகளுக்கு பரவி வரும் கொரோனா வைரஸ் மனித இனத்திற்கு பெரும் நாசத்தை விளைவித்து வருகிறது.
இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் 21,82,197 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வைரஸின் தாக்குதலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல்1,45,521 மக்கள் தங்கள் உயிர்களை இழந்து இருக்கின்றனர். உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக வல்லரசு அமெரிக்கா விளங்கிக் கொண்டிருக்கிறது. அங்கு அசுர வேகம் எடுத்திருக்கும் கொடிய கொரோனா வைரஸ் இதுவரையில் 6,77,570 மக்களை தாக்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29,479 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 4,141 மக்களை கொரோனா வைரஸ் காவு வாங்கியிருப்பதாக அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு கூறியுள்ளது. இந்த நிலையில் அந்நாட்டில் பலியானவர்களில் எண்ணிக்கை 34,617ஐ எட்டியுள்ளது. கொரோனா வைரஸின் தீவிரத்தால் அமெரிக்க வல்லரசு நிலைகுலைந்து போயிருக்கிறது.
அமெரிக்காவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகராக நியூ யார்க் இருக்கிறது. அங்கு மட்டும் 2,14,648 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 11,586 பேர் பலியாகி உள்ளனர். நியூயார்க்கை அடுத்து இரண்டாவது இடத்தில் நியூ ஜெர்சி நகரம் இருக்கிறது. அங்கு 71 ஆயிரம் மக்களை கொரோனா தாக்கி 3,156 பேர் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்காவில் கொரோனா பலி 30 ஆயிரத்தை நெருங்குவதால் மக்கள் பெருத்த அச்சமடைந்துள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு திணறி வருகிறது.