அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உருவெடுத்துள்ளார். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 2014ல் அவர் பிரதமராக பதவியேற்றதிலிருந்து, அமெரிக்கா மற்றும் பிரிட்டன், ஜெர்மனி, ஃபிரான்ஸ், இத்தாலி, இஸ்ரேல் ஆகிய ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், கிழக்காசிய நாடுகள் என உலகம் முழுதும் அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை மேம்படுத்தி, சர்வதேச அரங்கில் இந்தியாவின் மீதான மதிப்பையும் இந்தியர்களின் மீதான மதிப்பையும் உயர்த்தினார். 

வல்லரசு நாடுகளின் தலைவர்களுடன் நல்லுறவை மேம்படுத்திய பிரதமர் மோடி, பயங்கரவாதத்துக்கு எதிராக உலக தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் வெற்றி கண்டதுடன், தனது ஆற்றல், திறமை, அணுகுமுறை, செயல்திட்டங்கள், வெளியுறவு கொள்கைகள், பேச்சு ஆகியவற்றின் மூலம் உலக தலைவர்களை தன்வசப்படுத்தினார். 

இந்நிலையில், கொரோனாவிற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுமே போராடிவரும் நிலையில், இதை வாய்ப்பாக பயன்படுத்தி இந்திய எல்லைக்குள் அத்துமீறி சீன ராணுவம் நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த நிலையில், இந்தியா கொடுத்த பதிலடியில் சீன ராணுவத்திலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. 

கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, சீனாவுடனான ராணுவ, வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியான கொள்கைகளை அதிரடியான மாற்றங்களை செய்து கெத்து காட்ட தொடங்கியுள்ளது இந்தியா. சீன பொருட்களின் இறக்குமதியை குறைப்பது, சீன நிறுவனங்களின் முதலீடுகளை தவிர்ப்பது, சீனா விவகாரத்தில் எல்லையில் களத்தில் இருக்கும் வீரர்களே சூழலை பொறுத்து முடிவெடுக்கும் சுதந்திரத்தை அளித்தது என இந்திய அரசாங்கம், சீனாவை ஓடவிடுகிறது. 

அதன் ஒரு கட்டமாக, டிக் டாக், ஹெலோ, ஷேர் இட், யூசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடைவிதித்தது இந்திய அரசு. இது சீனாவிற்கு மரண அடியாக விழுந்துள்ளது. இப்படியாக பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியான தாக்குதல்களை இந்தியா மேற்கொண்டிருக்கும் நிலையில், இன்று காலை திடீரென, இந்தியா - சீனா எல்லை பகுதியான லடாக்கிற்கு சென்று ராணுவ வீரர்களுடன் உரையாடி, சீனாவை எச்சரிக்கும் தொனியிலும் உலக அரங்கில் இந்தியாவின் மரியாதை உயர்ந்திருப்பதை சுட்டிக்காட்டியும் பேசிய பிரதமர் மோடி, ராணுவ வீரர்களை பாராட்டி உத்வேகப்படுத்தினார். கல்வான் தாக்குதலில் காயமடைந்த வீரர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

பிரதமர் மோடியின் லடாக் விசிட்டும், அவர் ஆற்றிய உரையும் சர்வதேச அரங்கில் பிரதமர் மோடி மற்றும் இந்தியாவின் மீதான மதிப்பையும் இந்தியாவின் சக்தியையும் பறைசாற்றியுள்ளது. 

பிரதமர் மோடி உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார். பிரதமர் மோடியை புறந்தள்ளிவிட்டு, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறமுடியாது எனுமளவிற்கு உருவெடுத்துள்ளார் மோடி. 

ஏற்கனவே கொரோனா விவகாரத்தில் சீனாவின் மீது அமெரிக்காவும் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் கடுங்கோபத்தில் இருக்கும் நிலையில், சீனாவை பிரதமர் மோடி கதிகலங்கவைப்பது, டொனால்ட் டிரம்புக்கும் அமெரிக்காவிற்கும் மகிழ்ச்சியை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. 

ஏற்கனவே, பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நல்ல பழக்கம் இருப்பதால், அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மோடி மற்றும் இந்தியாவின் புகழ்பாடுகிறார் டிரம்ப். டிரம்ப் மட்டுமல்லாது அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடெனும் மோடியின் புகழ் பாடுகிறார். 

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடக்கவுள்ளது. குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் துணை அதிபரான ஜோ பிடெனும் போட்டியிடுகின்றனர். 

இந்நிலையில், இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கை பங்காளிகள். நான் அதிபரானால் இந்தியாவிற்கு முன்னுரிமை அளிப்பேன் என்று ஜோ பிடென் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் விதமாக ஹெச்1பி விசாவிற்கு டிரம்ப் விதித்த தடையை ரத்து செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். ஹெச்1பி விசாவிற்கு விதிக்கப்பட்ட தடையால் இந்திய ஐடி நிறுவனங்களும் இந்திய ஐடி ஊழியர்களுமே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜோ பிடென் இந்தியாவிற்கு ஆதரவாக பேச, சும்மா இருப்பாரா டிரம்ப்? இந்திய பிரதமர் மோடியுடனும் இந்தியாவுடனும் நல்லுறவை தொடர்ந்து வரும் டொனால்ட் டிரம்ப் ஒரு படி மேலே போய், நானும் மோடியும் வேறு வேறு அல்ல. நான் இந்திய கலாச்சாரத்தின் காதலன். இருநாட்டு உறவை பிரிக்க முடியாது என்று மார்தட்டியுள்ளார். 

அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள், தனது பெயரை சொல்லாமல் அமெரிக்காவில் ஜெயிக்க முடியாது என்கிற நிலையை மோடி உருவாக்கியுள்ளார். அந்தளவிற்கு சர்வதேச அரங்கில் வலிமையான தலைவராக தன்னை முன்னிறுத்தி கொண்டதுடன், அந்த இமேஜை தக்கவைத்துள்ளார் பிரதமர் மோடி.