பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பாகிஸ்தான் சென்ற முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜாத் சிங் சித்துவிற்கு பாஜக நிர்வாகிகள் மட்டுமல்லாது அவர் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதால் அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றார். அந்நாட்டு ஜனாதிபதி மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில், பாகிஸ்தானின் 22வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார்.  விழாவில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரும், பஞ்சாப் மாநில அமைச்சருமான  நவ்ஜோத் சிங் சிந்து, ரமிஸ் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் முன்வரிசையில் அமர்ந்திருந்த சித்துவை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் சுமர் ஜாவத் பஜ்வா வரவேற்றதோடு, கட்டித்தழுவினார். நவ்ஜாத் சிங் சித்து காங்கிரஸ் கட்சியில் இருப்பதோடு, பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். இந்தியாவை சேர்ந்த ஒரு மாநிலத்தின் அமைச்சர் பாகிஸ்தானின் ராணுவ தளபதியை கட்டித்தழுவிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சித்துவும் பாகிஸ்தான் ராணுவ தளபதியும் கட்டித்தழுவி கொண்டதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக செய்தித்தொடர்பு நிர்வாகியான சம்பீத் பத்ரா, பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டித் தழுவும்போது, அப்பாவி இந்திய மக்களையும் இந்திய ராணுவத்தினரையும் அந்நாட்டு ராணுவம் கொன்று குவிப்பது சித்துவிற்கு ஞாபகம் வரவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார். சித்துவை சஸ்பெண்டு செய்ய தயாரா? என அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவினர் மட்டுமல்லாமல், பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்கும் சித்துவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவ வீரர்கள் தினமும் கொல்லப்படுகின்றனர். அப்படியிருக்கையில், அந்நாட்டின் ராணுவ தளபதியை கட்டி தழுவியதற்கு எதிர்ப்பை தெரிவிப்பதாக அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.