சீனாவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், பயணிகள், விமான ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இண்டிகோ, ஏர் இந்தியா, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தனது சேவையைகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளன.இது குறித்து இண்டிகோ விமான சேவை நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “ டெல்லி - சீனாவின் செங்டு மற்றும் அதன் மறுமார்க்கத்தில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் வேகமாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன., பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்த விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்.

இதேபோல பெங்களூரு - ஹாங்காங் இடையேயான விமான சேவையும் பிப்ரவரி 1ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. இது தற்காலிகமான நடவடிக்கையே. இதனால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். முன்பதிவு செய்திருக்கும் பயணிகளுக்கு விமான கட்டணம் திரும்ப வழங்கப்படும்.

அதே சமயம், கொல்கத்தா - குவான்ங்ஸ்வோ இடையேயான விமான சேவை தொடர்ந்து இயக்கப்படும்” என்று அறிவித்துள்ளது. இதேபோல, ஸ்பைஸ்ஜெட், ஏர் இந்தியா உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்கள் சீனாவுக்கான விமான சேவையை நிறுத்தியுள்ள நிலையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.