பெட்ரோல் இல்லை, விமானத்தின் முக்கிய பாகங்கள் பழுதாகியபோதிலும் அமெரிக்காவில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கி 370 பயணிகளையும் பத்திரமாக இந்திய பைலட்கள் காப்பாற்றியுள்ளனர்.  வானிலேயே வட்டமடித்த சில மணிநேரங்களில் விமானத்தின் ஒவ்வொரு பாகமும் செயல் இழக்கத் தொடங்கிய போதிலும் பதற்றமின்றி விமானிகள் செயல்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. 

டெல்லியில் இருந்து நியூயார்க் நகரில் உள்ள கென்னடி விமான நிலையத்துக்கு 370 பயணிகளுடன் ஏர் இந்தியா போயிங் 777 விமானம் சென்றது. டெல்லியில் இருந்து எங்கும் இடைநிற்காமல் நியூயார்க் வரை இ்ந்த விமானம் செல்லும். அதேபோல கடந்த 11-ம் தேதி நியூயார்க சென்று அடைந்தது. ஆனால், விமானத்தை தரையிறக்கும் போது, விமானத்தின் லேண்டிங் கருவியில் பழுது ஏற்பட்டு இருப்பதை கேப்டன்கள் பாலியா, சுசாந்த் சிங், டிஎஸ் பாட்யியா, விகாஸ் ஆகியோர் கண்டுபிடித்தனர். 

இதனால், அதிர்ச்சி அடைந்த பைலட்கள், நியூயார்க் விமானபோக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துக் கூறினார்கள். இதையடுத்து தெளிவான வானிலை உள்ள பகுதியில் விமானத்தை இறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனால், ஒன்றரை மணிநேரம் வானில் விமானம் வட்டமடித்தது. அதன்பின் ஒவ்வொரு சிக்கலாக உருவாகியது, விமானத்தின் எரிபொருள் படிப்படியாக குறையத் தொடங்கியது, ஒவ்வொரு எந்திரமாக பழுதடைந்து வந்தது. இதனால், வேறுவழியின்றி விமானத்தை அவசரமாக தரையிறக்கும் நிர்பந்தம் ஏற்பட்டது.

 

விமானத்தை தரையிறக்க முயன்றபோது, காதைபிளக்கம் சத்தம் எஞ்சினில் இருந்து வந்ததால், பயந்து விமானத்தை மீண்டும் பறக்கவைத்தனர். இதையடுத்து, சிறிது நேரத்துக்கு பின் விமானம் மீண்டும் தரையிறங்க முயன்றபோது மீண்டும் பல கருவிகள் பழுதடைந்தன. இதனால், தெளிவான வானில உள்ள ஸ்டீவார்ட் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க இந்திய பைலட்களுக்கு அனுமதி தரப்பட்டது. ஆனால், அந்த விமானநிலையத்தில் போக்குவரத்து மோதலை தவிர்க்கும் கருவிகள் இல்லை எனக்கூறி தரையிறங்க பைலட்கள் மறுத்துவிட்டனர். 

நேரம் செல்லச் செல்ல விமானத்தில் பெட்ரோல் குறைந்து கொண்டே சென்றது. இது உடனடியாக அமெரிக்க விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டது. உடனடியாக அமெரிக்க விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இந்திய பைலட்களை தொடர்பு கொண்டு நியூஜெர்சியில் உள்ள நியூ ஆர்க் விமானநிலையத்தில் விமானத்தை தரையிறக்கலாம், அதற்கான தகுதி, பாதுகாப்பு வசதிகள் இருப்பதாகவும் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். 

இதையடுத்து, ஏர் இந்தியா விமானத்தை மிகுந்த கவனத்துடன் பைலட்கள் பத்திரமாக தரையிறக்கினார்கள்.இதனால், 370 பயணிகளின் உயிரும் காப்பாற்றப்பட்டது. மிகவும் நெருக்கடியான சூழலில் பதற்றமில்லாமல் பைலட்கள் பாலியா, சிங் ஆகியோர் செயல்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து ஏர் இந்தியா அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விமானத்தில் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் இருந்தபோதிலும் திறமையை விமானத்த தரையிறக்கிய பைலட்களுக்கு பாராட்டுக்கள் எனத் தெரிவித்தனர்.