Asianet News TamilAsianet News Tamil

இந்தியப் பயணத்தை ரத்து செய்த எலான் மஸ்க் சீனாவுக்கு திடீர் பயணம்!

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஞாயிற்றுக்கிழமை சீனாவுக்குச் சென்றுள்ளார். இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்பட்ட நிலையில் அந்தப் பயணத்தை ரத்து செய்தார். அடுத்த ஒரு வாரத்தில் புதிய திருப்பமாக சீனாவுக்குப் போயிருக்கிறார்.

After putting off India visit, Tesla CEO Elon Musk lands in China sgb
Author
First Published Apr 28, 2024, 10:22 PM IST

இந்திய பயணத்தை ஒத்திவைத்த டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தீடீரென சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஞாயிற்றுக்கிழமை சீனாவுக்குச் சென்றுள்ளார். இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்பட்ட நிலையில் அந்தப் பயணத்தை ரத்து செய்தார். அடுத்த ஒரு வாரத்தில் புதிய திருப்பமாக சீனாவுக்குப் போயிருக்கிறார்.

டெஸ்லா கார் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு மத்தியில், சீனா சென்றுள்ள எலான் மஸ்க் டெஸ்லாவின் தானியங்கி கார் மென்பொருளை சீனாவில் வெளியிடுவது பற்றி சீன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில், சீனாவில் டெஸ்லாவின் தானியங்கி கார்களை அறிமுகப்படுத்துவது பற்றி கூறியிருந்த நிலையில் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை சீனா சென்றவுடன் அந்நாட்டு பிரதமர் லீ கியாங்கை சந்தித்ததாக சீன அரசு ஊடகத்தில் வெளியான செய்தியில் கூறப்படுகிறது. அப்போது இருவரும் சீனாவில் டெஸ்லாவின் வளர்ச்சி, அமெரிக்கா - சீனா இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு ஆகியவை பற்றியும் பேசியதாகத் தெரிகிறது.

டெஸ்லா உலகளவில் தனது மிகப்பெரிய ஆலையை ஷாங்காய் நகரில் வைத்திருக்கிறது. அங்கு ஆண்டுக்கு 10 லட்சம் யூனிட் மாடல் 3 மற்றும் மாடல் Y கார்களை உற்பத்தி செய்கிறது. இந்நிலையில், இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைப்பதற்கு சாதகமாக கடந்த மாதம் இந்தியாவும் தனது மின்சார வாகனக் கொள்கையை (EV) வெளியிட்டது.

டெஸ்லா தொடங்கியதில் இருந்து 1.7 மில்லியனுக்கும் அதிகமான கார்களை சீனாவில் விற்பனை செய்துள்ளது. மேலும், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவிற்கு டெஸ்லா கார்கள் சீனாவில் இருந்து ஏற்றுமதி ஆகின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios