பிரதமர் மோடி ஒரு சீர்திருத்தவாதி - பிரபல ஆய்வாளர் ரே டாலியோ புகழாரம்
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பிரபல முதலீட்டாளரும் ஆய்வாளருமான ரே டாலியோ, அவர் ஒரு சீர்திருத்தவாதி என புகழாரம் சூட்டி உள்ளார்.
அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், எலான் மஸ்க் உள்பட பல்வேறு பிரபலங்களையும் சந்தித்து, அவர்களுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது இந்தியா குறித்தும், இந்தியாவின் வளர்ச்சி குறித்தும் மோடியுடன் அவர்கள் கலந்துரையாடி உள்ளனர்.
அந்த வகையில் பிரபல முதலீட்டாளரும் ஆய்வாளருமான ரே டாலியோ பிரதமர் மோடியை சந்தித்து அவருடன் கலந்துரையாடினார். அப்போது இந்தியாவின் ஆற்றல் மகத்தானதாக உள்ளதாகவும், பிரதமர் மோடி ஒரு சீர்திருத்தவாதி என்றும் புகழாரம் சூட்டி இருக்கிறார். மோடியுடனான சந்திப்புக்கு பின் அவருடன் கலந்துரையாடிய விஷயங்கள் குறித்து பேட்டியும் அளித்திருக்கிறார் ரே டாலியோ.
அந்த பேட்டியில் மோடியுடனான சந்திப்பு குறித்து ரே டாலியோ கூறுகையில், “பிரதமர் மோடி போன்ற ஒருவருக்கு நல்ல நேரம் வந்துவிட்டது என்றால், அது இந்தியாவுக்கும் நல்ல நேரம் தான். இந்தியாவின் ஆற்றல் மகத்தானது, மாற்றும் திறன் கொண்ட ஒரு சீர்திருத்தவாதி இப்போது உங்களிடம் இருக்கிறார். இந்தியாவும் பிரதமர் மோடியும் நிறைய வாய்ப்புகளை உருவாக்கும் முனைப்பில் உள்ளனர்” என கூறினார்.
இதையும் படியுங்கள்... ஆதார் போன்ற திட்டங்கள் உலகிற்கே வழி காட்டியாக இருக்கும் - நோபல் பரிசு பெற்ற பால் ரோமர் பேச்சு