Russia Ukraine Crisis :இந்தியர்களை வெளியேற்ற விரைவில் மாற்று ஏற்பாடு..இந்திய தூதரகம் அறிவிப்பு..
உக்ரைனில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மாற்று வழிகள் மூலம் இந்தியர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு பச்சைக் கொடி காட்டினார்.உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கிய ரஷ்யா, உக்ரைனின் விமானப்படை தளங்களை அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.இதனிடையே தலைநகர் கீவ்-வில் தொடர் தாக்குதல் நடப்பதால் அங்கிருந்து பிற நகரங்களுக்கு படையெடுக்கும் சூழல் உருவாக்கியுள்ளது. மெட்ரோ நிலையங்கள்,சுரங்க பாதைகளில் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில்,உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.குண்டு மழைகளை பொழிந்து வரும் நிலையில்,அந்த வாய்ப்பை பயன்படுத்தி இரண்டு நகரங்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.இதற்கிடையில், 100-க்கும் மேற்பட்ட தங்களின் ராணுவ வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.தற்போது துறைமுகங்களைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், தலைநகர் டெல்லியில் வெளியுறவு அமைச்சகம் சார்பில் அவசர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்கள், குறிப்பாக மாணவர்களை எப்படி மீட்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.இதற்காக அங்குள்ள இந்தியர்கள் எந்தெந்த பகுதிகளில் உள்ளனர், அவர்களை எப்படி ஒருங்கிணைத்து மீட்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதற்கிடையில்,உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக டெல்லியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்திய விமானம் பாதியிலேயே திரும்பியது.அந்த விமானம் கீவ் விமான நிலையம் சென்று சேர்வதற்கு முன்னரே உக்ரைன் தனது விமான நிலையங்களை சிவில் விமானப் போக்குவரத்துக்கு அனுமதியில்லை எனக் கூறி மூடியது.அந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட சில நிமிடங்களில் ரஷ்ய ராணுவம் விமான நிலையத்தின் அருகே தாக்குதலைத் தொடங்கியது. இந்தச் சூழலில் ஏர் இந்தியா விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது.
இதனால் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கேயே பாதுகாப்பாக இருக்கும்படியும், பதற்றம் அடைய வேண்டாம் என்று இந்திய அரசு தூதரகம் வாயிலாக அறிவுறுத்தியுள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்காக உதவி எண்களையும் அறிவித்துள்ளது.
உக்ரைனில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மாற்று வழிகள் மூலம் இந்தியர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியர்களை வெளியேற்ற மாற்று நடவடிக்கை செய்யப்பட்டவுடன் உடனடியாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் இந்தியர்கள் பாஸ்போர்ட் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை எப்போது வைத்திருக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.