அமெரிக்க அதிபராக ஜோ பிடன் பதவியேற்ற 10 நாட்களில் அவர் 4 முக்கிய பிரச்சினைகளை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுப்பார் என வெள்ளை மாளிகையின் முதன்மை அதிகாரி ரான் கிளான் தெரிவித்துள்ளார்.  நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் அதி பெரும்பான்மையுடன் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் வரும் 20ஆம் தேதி அவர் அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ளார்.  பதவியேற்ற உடன் அவர் எதிர்கொள்ள ஏராளமான சவால் மிகுந்த பணிகள் காத்திருக்கிறது எனவும் கிளான் கூறியுள்ளார்.  

கொரோனா வைரஸ் தொற்று, அதனால் நோய்வாய்ப்பட்ட அமெரிக்கப் பொருளாதாரம், காலநிலை மாற்றம் மற்றும் அமெரிக்காவில் மீண்டும் தலை தூக்கும் நிறவெறி உள்ளிட்ட நான்கு முக்கியமான நெருக்கடிகளை தீர்க்க பிடன் உறுதியாக உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து தெரிவித்துள்ள ரான் கிளான் அமெரிக்காவை சூழ்ந்துள்ள பல முக்கிய நெருக்கடிகளை உடனடியாக தீர்க்க பிடன் முடிவு செய்துள்ளார். ட்ரம்ப் காலத்தில் உருவான பல பிரச்சனைகளுக்கு தகுந்த தீர்வுகாண வேண்டிய அவசியம் மேலோங்கியுள்ளது.  ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றவுடன் பிடன் பல உத்தரவுகளில் கையெழுத்து போட உள்ளார். பதவியேற்ற 10 நாட்களில் முக்கிய நான்கு நெருக்கடிகளை சமாளிக்கவும் அதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தவும், தற்போது அமெரிக்கா சந்தித்து வரும் மீள முடியாத இழப்பை தடுக்கவும்,  உலகில் அமெரிக்கா இழந்த இடத்தை மீட்டெடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் பிடன் உறுதியாக உள்ளார். 

உலக சுகாதார அமைப்பின்  கூற்றுப்படி அமெரிக்காவில் இதுவரை 3 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் அதிகமானோர்  கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். விரைவில் உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டும் சூழல் உள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் ஒரு லட்சம் பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் நிலை உள்ளது. அதேபோல் இந்த தொற்று நோயின் தாக்கம் அமெரிக்க பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவில் கடுமையான வேலையின்மை நெருக்கடி அதிகரித்துள்ளது. எனவே இதிலிருந்து மீண்டு வர பிற உதவிகளின் மூலம் பொருளாதாரத்தை  மீட்டெடுக்க 1.9 ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டத்தை பிடன் தொடங்க உள்ளார்.

மேலும் covid-19 தடுப்பூசி தயாரிப்பை துரிதப்படுத்தவும் அவர் உறுதியான திட்டம்  வைத்துள்ளார். ஏற்கனவே அவர் கூறியபடி பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைதல் மற்றும் சில முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் அதில் இடம்பெறுவதற்கு ட்ரம்ப் விதித்த தடையை நீக்குவது உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களில் பிடன் கையெழுத்திடுவார் என ரான் கிளாட் கூறியுள்ளார்.