ஆடி கார் சிஇஓ வை தூக்கி உள்ளே வைத்த போலீஸ்…..எதுக்கு தெரியுமா ?
ஆடி மற்றும் வோல்க்ஸ்வேகன் கார்கள் குறித்து பொய்யான விளம்பரம் செய்தது மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆடி கார் நிறுவனத்தின் சிஇஓ ருபர்ட் ஸ்டாட்லர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெர்மனியில் உள்ள வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் கீழ், ஆடி கார் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த ஆடியின் A6 மற்றும் A7 மாடல்களின் 60,000 கார்களில் டீசல் எஞ்சின் உமிழ்வு சாப்ட்வேர்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக எழுந்த சர்ச்சையில், ஆடி நிறுவன தலைமை நிர்வாகி ஸ்டாட்லருக்கும் இந்த மோசடியில் தொடர்பிருப்பதாக தகவல்கள் கசிந்தன. இந்த சர்ச்சை வோக்ஸ்வேகன் கார்களையும் வெகுவாக பாதித்தது.
முதன் முதலில் இந்த ஏமாற்று சாஃப்ட் பேர் கருவிகள் வோல்க்ஸ் வேகன் கார்களில் பொறுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஆடம்பர வாகனமான ஆடி காரிலும் இந்த டீசல் புகை வெளியேற்ற தரவு மறைப்புக் கருவி பொருத்தப்பட்டது பின்னர் சோதனைகளில் தெரியவந்தது.
கடந்த ஆண்டு மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று கூறி, 8,50,000 கார்களை ஆடி நிறுவனம் திரும்பப் பெற்றது. முன்னதாக செப்டம்பர் 2015ல் டீசல் உமிழ்வு மோசடி முதல் முறையாக வெளிச்சத்திற்கு வந்தது.
இந்நிலையில் ஆடி கார் நிறுவன தலைமை நிர்வாகி ரூபெர்ட் ஸ்டாட்லர், ஜெர்மனியில் இன்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவர் மீது, ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர். இதையடுத்து அவரைக் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அமெரிக்காவில் விற்கப்பட்ட சுமார் 6 லட்சம் வோல்க்ஸ்வேகன் கார்களில் டீசல் புகை வெளியேற்ற மறைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டதாக வோல்க்ஸ்வேகன் ஒப்புக் கொண்டது. இந்த சாஃப்ட்வேர் உலகம் முழுதும் 11 மில்லியன் கார்களில் பொருத்தப்பட்டதாகவும் தெரிகிறது