Ukraine-Russia War: 6000 ரஷ்ய வீரர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்... ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி!!
6 நாட்களாக நடந்து வரும் போரில் இதுவரை 6000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
6 நாட்களாக நடந்து வரும் போரில் இதுவரை 6000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை காலை உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதாக அறிவித்தது. உக்ரைன் அரசு ஐரோப்பாவிற்கு நெருக்கமாகவும், நேட்டோ படைகளுக்கு நெருக்கமாகவும் இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனை ரஷ்யா அனைத்து பக்கங்களில் இருந்தும் தாக்கி வருகிறது. முக்கியமாக மேற்கு உக்ரைன் பரப்பை குறி வைத்து ரஷ்யா தாக்கி வருகிறது. உக்ரைனின் கார்கிவ் பகுதியில்தான் ரஷ்யா இதுவரை கொடூர தாக்குதலை நடத்தி உள்ளது. அங்கு கடந்த 6 நாட்களாக கடுமையான ஏவுகணை தாக்குதல்கள், பீரங்கி தாக்குதல்களை நடத்தி உள்ளது. அங்கு மட்டும் அதிகாரபூர்வமாக 50 பேர் வரை பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் உண்மையான கணக்கு இதைவிட அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ரஷ்யாவின் ஒரு சில விமானங்களும் இங்குதான் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதேபோல் தலைநகர் கீவிலும் கூட ரஷ்யா கடுமையான தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரஷ்யா தனது பீரங்கிகளை குவித்து வைத்துள்ளது. நேற்று இந்த பீரங்கிகளின் சில உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தியது. இங்கிருந்து மக்களை வெளியேற ரஷ்யா உத்தரவிட்டது. இதனால் வரும் நாட்களில் இந்த பகுதி முழுக்க ரஷ்ய படைகள் மொத்தமாக பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் உக்ரைனுக்கு மேற்கு உலக நாடுகள் உதவி வருகின்றன.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்ற ஐரோப்பிய நாடுகள் பல உதவி வருகின்றன. பல நாடுகள் பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்கி உள்ளன. அதேபோல் ஏவுகணைகள், குண்டுகள், துப்பாக்கிகள் ஆகியவற்றையும் உக்ரைனுக்கு 30க்கும் அதிகமான நாடுகள் வழங்கி உள்ளன. மேலும் உலக வங்கி தொடங்கி அமெரிக்கா வரை பல நாடுகள் உக்ரைனுக்கு பொருளாதார ரீதியாக பல மில்லியன் டாலர்களை வாரி இறைத்துள்ளது. தற்போது 6 நாட்களாக நடந்து வரும் போரில் இதுவரை 6000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பீரங்கிகள், ரஷ்ய விமானங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. பலர் சிறிய பிடிக்கப்பட்டுள்ளனர் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் தரப்பிற்குதான் அதிக அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.